Tuesday, December 28, 2010

“AVO ASKETHENO CHERIKIN ONTE NETWORK COMMUNITY KERENGO”


An appeal is hereby made to all sourashtrians to join "Sourashtradata.com" - A database with a unique objective - Helping our community folks who are in need.


Many of us have achieved our life goals in our own way and yet we are cut off from rest of our community. Even though, we have desire to help our community in whatever way we can, We could not proceed beyond certain point mainly due to lack of connectivity among us. This database aims to address this issue.


We, in association with the Sourashtra Chambers of Commerce, initiated a process to create a data base of all Sourashtrians living across the world. Basic information is only sought, to begin with, to make ourselves available to our own community.

http://www.sourashtradata.com/

Wednesday, October 13, 2010

திரு.M .V .வெங்கட்ராமன் அவர்கள் எழுதிய சிறுகதை


குறிப்பு - இது நம் சமூக எழுத்தாளர் திரு.M .V .வெங்கட்ராமன்
அவர்கள்

எழுதியது.

இவரைப் பற்றிய குறிப்புகள் எனக்கு அதிகம் தெரியவில்லை.அழியாச்சுடர்கள்

என்னும்

தளத்திலிருந்த இந்தக் கதையை அப்படியே இங்கே தந்திருக்கிறேன்.



நன்றி - www.azhiyasudargal.blogspot.com





விழிப்பு வந்ததும் ராஜம் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

தூக்கக் கலக்கம் இல்லாவிட்டாலும் எதையோ எதிர் பார்த்தவன் போல் கொஞ்ச

நேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தபடி பக்கத்து வீட்டுச் சேவல்

‘கொக்.... கொக் கொக்கோகோ’ என்று கூவியதும் அவனுக்குச் சிரிப்பு

வந்தது.



‘நான் கண் திறக்க வேண்டும் என்று இந்தச் சேவல் காத்திருக்கும் போல

இருக்கு! இப்போ மணி என்ன தெரியுமா? சரியாக நாலரை!’ என்று தனக்குள்

சொல்லிச் சிரித்தவாறு, இடுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு

எழுந்தான்.



காலையில் அம்மா முகத்தில் விழித்து விடக் கூடாது என்று அவனுக்குக்

கவலை. இருட்டில் கால்களால் துழாவியபடி இரண்டு தங்கைகளையும்

தாண்டினான். அப்பால்தான் அம்மா படுத்திருந்தாள். கீழே குனியாமல்

சுவிட்சைப் போட்டான். வெளிச்சம் வந்ததும் உள்ளங்கைகளைப் பார்த்துக்

கொண்டான். ஆணியில் தொங்கிய கண்ணாடியை எடுத்து முகத்தைப் பார்த்துக்

கொண்டான். பிறகுதான் மனசு சமாதானப்பட்டது. அது என்னவோ, அம்மா

முகத்தைப் பார்த்தபடி எழுந்தால் அன்றைய பொழுது முழுவதும் சண்டையும்

சச்சரவுமாகப் போகிறது!



கடிகாரத்தில் மணி பார்த்தான். நாலு முப்பத்திரண்டு...!



பக்கத்து வீட்டில் கொல்லைப் பக்கம் ஒரு சின்ன கோழிப் பண்ணை

வைத்திருக்கிறார்கள். சேவல் இல்லாமல் கோழிகள் ஏழெட்டு மாதம் முட்டை

இடும் அதிசயம் அங்கே நடக்கிறது. சும்மா அழகுக்காக அடுத்த வீட்டுக்காரர்

ஒரு சேவல் வளர்க்கிறார். ஜாதி சேவல்; ஒன்றரை அடி உயரம். வெள்ளை

வெளேரென்று டினோபால் சலவை செய்த உருப்படி போல் இருக்கும்.

அதுதான் நாலரை மணிக்குச் சொல்லி வைத்தாற்போல் கூவுகிறது.



‘என்னைக்காவது ஒரு நாள் நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?

சுவரேறி குதிச்சு சேவல் கழுத்தைத் திருகி, குழம்பு வச்சி தின்னுடப் போறேன்.

அதெப்படி கரெக்டா நாலரை மணிக்குக் கூப்பாடு போடுது! காலை நேரத்திலே

ஐயோய்யோ என்று கத்தறாப் போலே சகிக்க முடியல்லே!’



அவன் கவனம் தறி மேடை மீது சென்றது. இரண்டை முழம் நெய்தால்

சேலை அறுக்கலாம். கடைசிச் சேலை. இன்றைக்குச் சாயங்காலம்

அறுத்துவிட வேண்டும். முடியுமா? முதலாளி கூப்பிட்டு ஏதாவாது வேலை

சொல்லாமல் இருக்க வேண்டும். அம்மா சண்டை வளர்க்காமல் இருக்க

வேண்டும். முதலாளி கூப்பிட்டால் சால்ஜாப்பு சொல்லலாம்? ஆனால் இந்த

அம்மாவை எப்படி ஒதுக்குவது?



குனிந்து தைரியமாக அம்மாவைப் பார்த்தான். தூக்கத்திலே கூட உர்றென்று...

பார்க்கச் சகிக்கவில்லை. பெற்றவளை அப்படிச் சொல்வது பாவல்

இல்லையா? ஒன்றா? இரண்டா? ஆண் பிள்ளையிலே ஐந்து, பெண்

பிள்ளையிலே ஐந்து, பத்தும் பிழைத்துக் கிடக்கின்றன, சேதாரம் இல்லாமல்.

அப்பா நெசவு வேலையில் கெட்டிக்காரர். குடித்துவிட்டு வந்து அம்மாவைத்

தலைகால் பாராமல் உதைப்பார்; உதைத்து விட்டுத் தொலைவாரா? அம்மா

காலில் விழாத குறையாக இரவு முழுவதும் அழுது கொண்டிருப்பார்.



ராஜம், வீட்டுக்கு மூத்த பிள்ளை. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுப்

போட்டுப் பத்துக் குழந்தைகள் பிறந்த கதை அவனுக்குத் தெரியும்.



‘இவ்வளவு சண்டை போட்டிருக்காவிட்டால், இத்தனை குழந்தைகள்

வந்திருக்காது. பெண்டாட்டியை ஏன் அடிக்கணும், பிறகு அது மோவாயைப்

பிடித்து ஏன் கெஞ்சணும்? அதான் எனக்குப் புரியல்லே’.



அப்பாவால்தான் அம்மா கெட்டுப் போயிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவள்

அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. அடிதாங்க முடியாமல் எதிர்த்து

வாயாடத் தொடங்கினாள். உடம்பிலே தெம்பு குறைந்ததும் பதிலுக்கு

அடிக்கவும், கடிக்கவும் ஆரம்பித்தாள்.



அம்மாவுக்கு சோழிப்பல். உதடுகளைக் காவல் காப்பது போல் வெளியே

நிற்கும். அப்படி குடி போதையில் அவளை அடிக்கும்போது, கையோ,

காலோ, வாயோ, வயிறோ, பல்லில் சிக்கிய இடத்தைக் கடித்துக் குதறி

விடுவாள்.



அவளிடம் கடிபடாமல் தப்புவதற்காக அப்பா தறிமேடையைச் சுற்றிச் சுற்றி

ஓடிய காட்சியை நினைத்தபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது.



“நீ நாயாப் பிறக்க வேண்டியவ...”



“அதுக்காவத்தான் உன்னைக் கட்டிக்கிட்டுச் சீரளியறேன்...”



அம்மா சாதாரணமாய் அப்பாவுக்கு ‘நீங்க’ என்று மரியாதை தருவது

வழக்கம்; ஆனால் சண்டையின் உச்ச கட்டத்தில் இந்த மரியாதை பறந்து

போகும்.



”உனக்கு வாய் நீளமாப் போச்சு. பல்லைத் தட்டி கையிலே

கொடுத்தாத்தான்...”



“எங்கே பல்லைத் தட்டு, பார்க்கலாம்! ஆம்பிளையானா என்கிட்டே வா,

பார்க்கலாம்!” என்று அம்மா சவால் விட்டு, தட்டுவதற்காகப் பற்களைப்

பிரமாதமாய்க் காட்டுவாள்.



ஆனால், அப்பா அவளுடைய பற்களை நெருங்கத் துணிந்ததில்லை. தெளிந்த

போதையை மீட்டுக் கொள்வதற்காக மறுபடியும் கள்ளுக்கடைக்கு ஓடி

விடுவார்.



அம்மாவின் கடிக்கு பயந்துதானோ என்னவோ, அவள் பத்தாவதாக ஒரு பெண்

குழந்தை பெற்றதும் அப்பா செத்துப் போனார். அவர் செத்ததே

வேடிக்கைதான்.



அம்மாவின் பிரசவங்கள் எல்லாம் வீட்டில்தான் நடப்பது வழக்கம். துணைக்கு

அத்தை ஒருத்தி வருவாள். குழந்தை பிறந்ததைத் தாம்பாளத்தில் தட்டி

அத்தைதான் அறிவிப்பாள்.



“என்ன குளந்தே?” என்று கேட்டார் அப்பா.



“கணக்கு சரியாப் போய்ச்சு. ஆண் பிள்ளையிலே அஞ்சு இருக்கா? பெண்

பிள்ளையும் அஞ்சு ஆயிடுச்சு”.



“பொண்ணு பிறந்திருக்குன்னா சொல்றே?”



“அதான் சொல்றேன்.”



“அஞ்சு பெண்களைக் கட்டிக் கொடுக்கிறதுக்குள்ளே நான் காவேரிக் கரைக்குப்

போயிடுவேன். போயும் போயும் பெண்ணா பெத்தா?”



“நீங்க ஒண்ணும் கலியாணம் பண்ணிக் கிழிக்க வேணாம். அவங்க அவங்க

தலை எழுத்துப்படி நடக்கும். நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்”

என்றாள் அம்மா, அறையில் இருந்தபடி.



”நான் எப்படி கவலைப்படாமே இருக்க முடியும்? நீ பொம்பிளே; வீட்டிலே

உட்கார்ந்து பேசுவே. தெருவில் நாலு பேருக்கு முன்னாடி போறவன் நான்

இல்லே? குதிராட்டம் பெண்ணுங்க கல்யாணத்துக்கு நிக்குதுன்னு

என்னையில்லே கேப்பாங்க?”



“குளந்தே இப்பத்தான் பிறந்திருக்கு. அதுக்குள்ளே கலியாணத்தெப் பத்தி என்ன

கவலை?”



“முன்னாடியே நாலு பெத்து வச்சிறிக்கியே. எல்லாத்துக்கும் கலியாணம்

கார்த்தி செய்யறதுன்னா சின்ன வேலெயா? போயும் போயும் பெண்ணா

பெத்தே?”



மனைவி, பெண் பெற்ற கவலையை மறப்பதற்காக அவர் காலையிலிருந்தே

குடிக்கத் தொடங்கினார். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை அறை வாசலில்

தலை காட்டுவார்; ‘போயும் போயும் பெண்ணா பெத்தே?” என்று பெருமூச்சு

விடுவார்; வெளியே சென்று குடித்து விட்டு வருவார். நாள் பூராவும் இந்தக்

கேள்வியும் குடியுமாகக் கழிந்தது.



இரவு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. வீடு நாறும்படி வாயில்

எடுத்தார். பிறகு ரத்தமாய்க் கக்கி விட்டு மயங்கிப் படுத்தவர், பெண்களுக்கு

மணம் செய்து வைக்கிற சிரமத்தைத் தட்டிக் கழித்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார்.



அப்புறம், எல்லாம் அம்மா பொறுப்பு.



அம்மா பொறுப்பு என்றால் அவள் பிரமாதமாய் என்ன சாதித்து விட்டாள்?

குழந்தைகளை வாட்டி வதக்கி வேலை வாங்கி வயிற்றை நிரப்பிக்

கொள்கிறாள். வயிற்றில் கொட்டிக் கொள்வதைத் தவிர அவளுக்கு

வேறொன்றும் தெரியாது.



சந்தடி கேட்டு அம்மா விழித்துக் கொள்ளப் போகிறாளே என்று ராஜம்

ஜாக்கிரதையாகவே பல் விளக்கினான். பல் விளக்கும்போது அவனுக்கு ஒரு

பழைய ஞாபகம் சிரிப்பு மூட்டியது.



சிறுவனாக இருந்தபோது அம்மா பல் துலக்குவதைப் பார்ப்பது அவனுக்கு

வேடிக்கை. ஒரு பிடி சாம்பலை அள்ளித் தண்ணீரில் நனைத்துப் பற்களைத்

தேய்ப்பாள்; ஒவ்வொரு பல்லாக தேய்ப்பதற்கு நீண்ட நேரமாகும். சிறுவனான

அவன் அவளருகில் போய் “ஒவ் அம்மா ஃபோக் சவஸ்தக் தாத் கூர்

கெல்லர்த்தெகா?” (ஏன் அம்மா, அப்பாவைக் கடிக்கப் பல்லைக்

கூராக்கிக்கிறியா?) என்று கேட்பான்.



“அரே தொகோ ஒண்டே பாடே ஃபந்தா! காய் திமிர்ஸா!” (அடே ஒனக்கு ஒரு

பாடை கட்ட! என்ன திமிர் பாரு!) என்று எச்சில் கையால் அம்மா அவனை

அடிக்க வருவாள்.



அவளிடம் சிக்காமல் அவன் தெருப்பக்கம் ஓடி விடுவான்.



மனத்தில் சிரித்தபடி பல் துலக்கி முடித்தான். பஞ்சாமி ஹோட்டலுக்குப் போய்

ஒரு காபி சாப்பிட்டு வந்து பிறகு தங்கையை எழுப்பிக் கொண்டு தறிக்குப்

போகலாம் என்று அவன் எண்ணம்.



முகத்தைத் துடைத்துக்கொண்டு கிழக்குத் திசையைப் பார்த்து, உதயமாகாத

சூரியனைக் கும்பிட்டான். தறி மேடைக்குப் பக்கத்திலிருந்த மாடத்தில்

கண்ணாடி இருந்தது. முகம் பார்த்து, தலை மயிரை வாரினான். சட்டையை

மாட்டிக்கொண்டு வெளியில் புறப்படத் தயாரானான்.



அம்மா சன்னமாய்க் குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள், பெண் பிள்ளைகள்

குறட்டை விடலாமா? சொன்னால் கேட்பாளா? அவன் சொல்லி அவள்

கேட்கிற பழக்கம் கிடையாது. அவன் சொன்னதற்காக அவள் பலமாய்க்

குறட்டை விடுவாள். ‘நான் ஹோட்டல்லேயிருந்து வர்ற வரை குரட்டை

விட்டார்.



”ரேய் ராஜம் கோட் ஜாரிஸ்தே?” (டே ராஜம், எங்கே போறே?) என்று

அம்மாவின் குரல் கடப்பாரையாய் அவன் தலையில் இடித்தது.



ஹூம். நடக்கக்கூடாது என்று எதிர்ப்பார்த்தது நடந்து விட்டது. அவன்

பேசவில்லை.



”கிளப்புக்குத்தானேடா? கிளாஸ்லே சாம்பார் வாங்கிட்டு வா.”



“கிளப்லே சாம்பார் தர மாட்டான்.”



“ஏன் தர மாட்டான்? ஒரு தோசை வாங்கிக்கோ.”



“பார்சல் வாங்கினாலும், பஞ்சாமி கிளப்லே தனியா சாம்பார் தர மாட்டான்.”



“எல்லாம் தருவான், கேளு.”



“தர மாட்டான். போர்டு போட்டிருக்கான்.”



“தோசை வாங்கினா சாம்பார் ஏன் தர மாட்டான்? எனக்கு ஒரு தோசை

வாங்கிட்டு வர உனக்கு இடமில்லை. இருபது பைசா செலவாயிடும்னு

பயப்படுறே. உன் வாய்க்கு மாத்திரம் ருசியா, சாம்பார் கொட்டிக்கிட்டு

ஸ்பெசல் தோசை தின்னுட்டு வருவே.”



”காலை நேரத்துலே நா ஒரு காபி சாப்பிட்டு தறிக்குப் போகலாம்னு

பார்த்தேன். நீ இப்படி வம்பு வளர்த்தா...”



“பெத்தவ தோசையும் சாம்பாரும் கேட்டா வம்பாவா தெரியுது?”



”வீடு பூரா தூங்குது. ஏன் இப்படி உயிர் போகிறாப் போல கத்தறே? பஞ்சாமி

கிளப்பிலே, தனியா டம்ளர்லே சாம்பார் தர மாட்டான்னு சொன்னா....”



“அங்கே போக வேணாம். வேறெ கிளப்புக்குப் போ. சாம்பாரோடதான் நீ

வீட்டிலே நுழையணும்.”



ராஜத்தின் நாவில் பஞ்சாமி ஹோட்டல் காபி மணத்தது. கும்பகோணத்தில்

பசும் பால் காபிக்காப் பிரபலமான ஹோட்டல் அது.



அம்மா சாம்பாரைத் துறக்கத் தயாராக இல்லை.



“சரி, நான் கிளப்புக்குப் போகல்லே; காபியும் சாப்பிடல்லே. குள்ளி, ஓவ்

(அடீ) குள்ளி, எகுந்திரு, தறிக்குப் போகலாம்.”



“நீ காபி சாப்பிடாவிட்டா சும்மா இரு. எனக்குத் தோசையும் சாம்பாரும்

கொண்டா.”



“என்கிட்டே காசு இல்லே; காசு கொடு, வாங்கிட்டு வர்றேன்.”



இவ்வளவு நேரம் பாயில் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தவள் துணுக்கென்று

எழுந்து உட்கார்ந்தாள்.



”என்ன சொன்னே? சொல்லுடா, என்ன சொன்னே?”



“அதிசயமா என்ன சொல்லி விட்டேன்? காசு குடுத்தா தோசையும் சாம்பாரும்

வாங்கிட்டு வர்றேன்னேன்.”



“பெத்தவளுக்கு ஒரு தோசை வாங்கிக் கொடுக்க வக்கில்லாமப் போச்சா?

இன்னம் தாலி கட்டின பாடில்லே. பெண்டாட்டியா வரப்போறவளுக்கு வாங்கித்

தர நோட்டு நோட்டா கிடைக்குது; இல்லியாடா?”



“இந்தாம்மா, சும்மா வாயை அவிழ்த்து விடாதே. நாலு குடித்தனத்துக்காரங்க

தூங்கறாங்க. உன் குரலைக் கேட்டு முழிச்சுக்கப் போறாங்க. நான் யாருக்கும்

ஒண்ணும் வாங்கித் தரல்லே.”



“பூனை கண்ணை மூடிக்கிட்டா ஊரே அஸ்தமிச்சதா நினைச்சுக்குமாம். நீ எதிர்

வீட்டுப் பொண்ணுக்காக என்னென்ன செலவு செய்றேன்னு எனக்குத்

தெரியாதா?”



“வாயை மூடு. ஊர்ப் பொண்ணுங்களைப் பத்தி இப்பிடி பேசினா...”



“இல்லாதது என்னடா பேசிட்டேன்? தெருவிலே போறப்போ நீ அதைப்

பார்த்துச் சிரிக்கிறதும், அது உன்னைப் பார்த்து இளிக்கிறதும், ஊரே சிரிப்பா

சிரிக்குது. நான் ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ; நீ அதைக் கட்டிக்கணும்னு

ஆசைப்படறே, அது நடக்காது. நான் உயிரோட இருக்கிறவரை அவ இந்த

வீட்டு மருமகளா வந்துட முடியாது.”



ராஜம், அம்மா முகத்தை வெறித்துப் பார்த்தான். அவளிடமிருந்து

தப்புவதற்காக அப்பா தறி மேடையைச் சுற்றி ஓடியது ஞாபகம் வந்தது.



“என்ன செஞ்சிடுவே? கடிச்சிடுவியோ?” என்று கேட்டான் ஆத்திரமாக.



“அடே பேதியிலே போறவனே, என்னை நாய் என்றா சொல்றே?” என்று

எகிறிக் குதித்தாள் அம்மா. “உன்னைச் சொல்லிக் குத்தமில்லே, அந்த

எதிர்வீட்டுக் கழுதை உனக்கு சொக்குப்பொடி போட்டிருக்கா. அது உன்னை

இப்பிடி ஆட்டி வைக்குது. டேய் பெத்தவளை நாய்ன்னு சொல்ற நாக்கிலே புழு

விழும்டா, புழு விழும்.”



அடுத்த வீட்டுச் சேவல் ஐயய்யோ என்று கத்தியது. ராஜத்துக்கு ஒரே

எரிச்சலாக வந்தது. சாம்பார் சண்டையைச் சாக்காக வைத்துக் கொண்டு

அம்மா பங்கஜத்தையும் அல்லவா திட்டுகிறாள்? திட்டி ஊரையே கூட்டி

விடுவாள் போல் இருக்கிறது. பங்கஜத்தின் பெற்றோர் அதைக் கேட்டால் என்ன

நினைப்பார்கள்? பங்கஜம் கேட்டால் என்ன பாடுபடுவாள்?



“காளி, வாயை மூடு. பொழுது விடியறத்துக்குள்ளே இப்படி கூச்சல் போட்டா

நல்லா இருக்கா? உனக்கு என்ன வேணும்? தோசை சாம்பார்தானே? டம்ளர்

எடு.”



அம்மா அசையவில்லை.



”சாம்பாரும் தோசையும் அந்தக் கழுதை தலையிலே கொட்டு. என்னை

நாய்ன்னு சொல்றியா? உனக்குப் பாடை கட்ட! வாயெ மூடிக்கிட்டுப் ’போனாப்

போவுது, போனாப் போவுது’ன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன். என் தலைய்லே

மிளகா அரைக்கிறியா? பரம்பரை புத்தி போகுமாடா? அப்பன் குடிகாரன்,

குடிகாரன் பிள்ளை எப்படி இருப்பான்?”



“சரி, போதும், நிறுத்து. நாய்ன்னு நான் சொல்லல்லே. டம்ளரை எடு.

சாம்பார் வாங்கிட்டு வர்றேன்.”



அவன் சொன்னதை அவள் கேட்டதாகத் தெரியவில்லை. வாயிலிருந்த

ஆபாசங்களை எல்லாம் துப்பிவிட்டுத்தான் நிறுத்துவாள் போலிருந்தது.



ராஜத்துக்கும் அளவு கடந்த கோபம். இவள் லண்டி; நிறுத்தமாட்டாள்; வாயில்

‘பளார், பளார்’ என்று நாலு அறை விட்டால்தான் இவள் வாயை மூடலாம்.

அறை விட்டிருப்பான்; அவளுடைய கூப்பாட்டுக்கு அஞ்சித்தான்

அடக்கிக்கொண்டான்.



“என்னடா முறைக்கிறே? இதெல்லாம் என்கிட்டே வச்சிகாதே.

பொம்பிளைதானே, அடிச்சா உதைச்சா யார் கேக்கப் போறாங்கன்னு

நினைக்கிறாயா? பெத்தவலைத் தொட்டு அடி பார்க்கலாம், உன்னை என்ன

செய்யறேன் பாரு. உடம்பிலே தெம்பு இல்லைன்னா நினைக்கிறே? நான் காளி

குப்பம்மாவுக்குச் சொந்தக்காரிடா. என்னைத் தொட்டுடு. உன் வயித்தெ கிழிச்சு

குடலை மாலையா போட்டுக்கிட்டு எதிர் வீட்டுக்காரி முன்னாலே போய்

நிப்பேன்!”



காளி குப்பம்மாள். கணவணின் வயிற்றை அரிவாள் மணையினால் கிழித்துக்

குடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டு, தெருத் தெருவாய்

கையில் அரிவாள்மணையுடன் சுற்றி விட்டுப் போலீசில் சரணடைந்ததாய்க்

கும்பகோணம் சௌராஷ்டிரர்கள் கதையாகச் சொல்வதை ராஜமும்

கேள்விப்பட்டிருந்தான். அம்மா, காளி குப்பம்மாவுக்கு சொந்தம் என்று

இன்றுதான் உறவு கொண்டாடுகிறாள். அவ்வளவு தைரியம் இவளுக்கு வராது.

ஏமாளிகளான பிள்ளைகளை மிரட்டுவாள்.



அவளுக்கு முன்னால் நின்று பேச்சுக் கொடுக்க முடியாது என்று ராஜத்துக்குப்

புரிந்தது. அவனே ஓர் எவர்சில்வர் டம்ளரை எடுத்துக்கொண்டு

ஹோட்டலுக்குப் புறப்பட்டான்.



அவன் பேசாமல் கிளம்பிய பிறகு அம்மா விடவில்லை; “எனக்காக நீ

ஒண்ணும் வாங்கிட்டு வராதே. வாங்கிட்டு வந்தா சாக்கடையிலே

கொட்டுவேன்.”



அவன் பதில் பேசாமல் புறப்பட்டான். ஒரு விநாடி தயங்கி நின்றான்.

அம்மாவை பிடித்து இழுத்து, தலை முடியை உலுக்கு கன்னங்களில் மாறி

மாறி அறைந்து, முகத்திலும் முதுகிலும் குத்தி, ‘விட்டுட்றா, விட்டுட்றா,

இனிமே நான் உன் வழிக்கு வரல்லே; நீ பங்கஜத்தைக் கட்டிண்டு சுகமாயிரு.

என்னை விட்டுடு’ என்று கதறக் கதற உதைத்துச் சக்கையாக மூலையில்

எறிந்து விடலாமா என்ற ஒரு கேள்வி காட்சியாகக் கண்களுக்கு முன்னால்

வந்தபோது அவன் மனசுக்கு சௌகரியமாயிருந்தது. ‘அப்பா அடிப்பாரே, அந்த

மாதிரி, அப்பாவைக் கடிக்கப் பாய்வாளே, அப்படிக் கடிக்க வருவாளோ?

வரட்டுமே; என்னிடம் பலிக்காது; பல்லைத் தட்டிக் கையில் தருவேன்’ என்று

மனத்துக்குள் கறுவிக் கொண்டான்.



ஒரு விநாடிக்கு மேல் இந்த மனசுகம் நீடிக்கவில்லை, அம்மா தாடகை;

பல்லைவிட அவள் சொல்லுக்குக் கூர் அதிகம். அவன் கை ஓங்கும்போதே,

அவள், ‘கொலை கொலை’ என்று சத்தம்போட ஆரம்பிப்பாள். ஐந்து குடிகள்

இருக்கிற வீடு, இருபது பேராவது இருப்பார்கள்; எல்லாரும் எழுந்து ஓடிவந்து

விடுவார்கள். அவனைத்தான் கண்டிப்பார்கள்.



அம்மாவை ஜெயிக்க முடியாது.



அவன் பேசாமல் நடந்தான். பௌர்ணமி போய் ஆறேழு நாள் இருக்கும்.

அரைச் சந்திரனின் வெளிச்சம் தாழ்வாரத்தில் வெள்ளையடித்தாற்போல்

கிடந்தது. மாசி மாதம்; பின்பனிக்காலம் என்று பெயர்; இரவு முழுவதும்

நன்றாய்க் குளிருகிறது. புறாக் கூடு போல் அறை அறையாகப் பிரிந்துள்ள

அந்த வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள்; விழித்துக்

கொண்டிருந்தால் பேச்சு சத்தம் கேட்குமே? தறி சத்தம் கேட்குமே? மூன்றாவது

குடியான சீதம்மா மட்டும் வெளியே படுத்திருப்பாள். அவள் மீது நிலா

வெளிச்சம் விழுந்தது. போர்வை காலடியில் துவண்டு கிடக்க, அவள் உடலை

அஷ்டகோணலாக ஒடுக்கிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்தாலே அவளும்

தூங்குகிறாள் என்று தெரிகிறது.



வீட்டில் யாரும் விழித்துக் கொள்ளவில்லை, அம்மாவின் காட்டுக் கத்தலைக்

கேட்கவில்லை என்ற திருப்தியுடன் ராஜம் முன்கட்டை அடைந்தபோது,

“என்ன ராஜம், ஹோட்டலுக்குப் புறப்பட்டியா?” என்று ஒரு குரல் தமிழில்

கேட்டது.



சாரங்கன்; விழித்திருப்பான் போல் இருக்கிறது. அம்மாவும் ராஜமும் சண்டைப்

போட்டதைக் கேட்டிருப்பானோ? கேட்டால் கேட்கட்டுமே! அவன் மட்டும்

ஒசத்தியா? தினம் பெண்டாட்டியோடு சண்டை; மைத்துனன் மத்தியஸ்தம்.

சௌராஷ்டிரனாய்ப் பிறந்தவன் சௌராஷ்டிர மொழியில் பேசினால் என்ன?

தமிழில்தான் பேசுவான்.



“ஹாய், ஹாய், ஏஃகெடிக் வெளோ கோட் ஜான்?” (ஆமா, ஆமா, இந்த

நேரத்திலே வேறெ எங்கே போவாங்க?) என்று சௌராஷ்டிர பாஷையிலேயே

பதில் சொன்னான் ராஜம்.



“கள்ளுக்கடைக்குப் போறியோன்னு பார்த்தேன்” என்று தமிழில் சிரித்தான்

சாரங்கன்.



“அங்கு ஃபோதா தெளிஞ் செனிகா?” (இன்னும் போதை தெளியல்லியா?)



“அதெப்படி தெளியும்? பக்கத்திலேயே பானையில் வச்சிருக்கேனே? அது

போகட்டும் எனக்கு ஒரு டம்ள்ர் சாம்பார் வாங்கிட்டு வா, ரெண்டு இட்லியும்

பார்சல் கட்டிக்கோ” என்ற சாரங்கன் ஓர் அலுமினிய டம்ளரை நீட்டினான்.



மறுக்க வேண்டாம் என்று ராஜத்தின் எண்ணம். ஆனால் சாரங்கன்

விஷமக்காரன். ஹோட்டலிலிருந்து திரும்பும் போது தாழிட்டு விடுவான்.

தொண்டைக் கிழியக் கத்தினாலும் கதவைத் திறக்க மாட்டான். ராஜத்தின் குரல்

கேட்டு அம்மா கதவைத் திறப்பதற்குள் - அம்மா திறப்பாளா? கண்

விழித்ததுமே காளி வேஷம் கட்டிக் கொண்டு விடுவாளே!



“ஹோட்டலுக்கு வாயேன்” என்றவாறே ராஜம் டம்ளரை வாங்கிக்கொண்டான்.



”வெறும் கதவைப் போட்டுவிட்டு நாம் போயிட்டா, திருட்டுப் பய எவனாவது

உள்ளே நுழைஞ்சி, பாவு அறுத்துகிட்டுப் போனா என்ன செய்றது? நான்

காவலுக்கு இருக்கேன்; நீ இட்லி கொண்டு வந்து கொடு” என்று சாரங்கன்

சமத்காரமாய்ச் சிரித்தான்.



மனசுக்குள் திட்டுவதைத் தவிர ராஜத்தினால் வேறொன்றும் செய்ய

முடியவில்லை. இரண்டு டம்ளர்களையும் ஏந்தியவனாய்த் தெருவில்

இறங்கினான்.



ஆகாயத்தில் நட்சத்திரங்களும் அரைச் சந்திரனும் குளிரில் நடுங்கிக்

கொண்டிருந்தன. ராஜத்தைக் கண்டதும் தெரு நாய் ஒன்று எழுந்தது.

அவனுக்குப் பின்னால் ஓடி வந்தது. அவன் அதற்கு ஒரு வாய் சோறு

போட்டதில்லை. என்ன காரணமோ அதிகாலையில் அவன் ஹோட்டலுக்குப்

போகும் போதும் திரும்பும் போதும் காவலாய்க் கூடவே ஓடி வரும்.

தெருவில் எலிகளும் பெருச்சாளிகளும் காலடிச் சத்தம் கேட்டுச் சிதறி ஓடின.

பன்றிகளும் கழுதைகளும் தீனி தேடிக் கொண்டிருந்தன. சில பெண்கள்

தெருவில் வீட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தனர்.

நாய் அவனுக்குப் பின்னால் ஓடியது.



ராத்திரி அவனுக்கு ஒரு சொப்பனம். பழைய சொப்பனம். அவனுக்கு வினாத்

தெரிந்த நாள் முதல் ஆயிரம் தடவைக்கு மேல் இந்தச் சொப்பனம்

வந்திருக்கும். அவன் ஏதோ ஒரு தெருவோடு போகிறான்; ‘வவ் வவ்’ என்று

குரைத்தவாறு ஒரு வெறி நாய் அவனைத் துரத்துகிறது; அவன் மூச்சுத் திணற

ஓடுகிறான். அது அவன் மேல் பாய்ந்து வலக்கால் கெண்டைச் சதையைக்

கடித்துப் பிடித்துக்கொள்கிறது. ‘ஐயோ’ என்று முனகிக் கொண்டோ,

கத்திக்கொண்டோ அவன் விழித்துக் கொள்வான். கனவுதானென்று உறுதி

செய்துக்கொள்ளச் சற்று நேரமாகும்.



ராத்திரியும் அதே கனவு; அதே வெறி நாய் அவனுடைய கால் சதையைக்

கடித்தது. வெறி நாய் கடித்தால் மனிதனுக்குப் பைத்தியம் பிடிக்கும்

என்கிறார்கள். கனவில் நாய் கடித்தாலும் பைத்தியம் பிடிக்குமா?



அவன் தெருமுனை திரும்பி விட்டான். நாலு திசைகளிலும் கண்ணோட்டம்

விட்டான். மனித நடமாட்டமே இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டான்.

தெரு நாய்தான் கூட இருந்தது. அவன் நின்றதும் அதுவும் நின்ரது. கனவில்

வந்த வெறிநாய் இந்த நாய் போல் சாது அல்ல; எவ்வளவு பயங்கரமாய் அது

குரைத்தது! அவன் அப்படிக் குரைத்தால் அம்மா பயப்படுவாளா, மாட்டாளா?

அவன் தெருநாயைப் பார்த்து கீச்சுக் குரலில் ‘வவ் வவ்’ என்று குரைத்தான்.

மனிதன் நாய் மாதிரி குரைப்பதைக் கேட்டிராத தெரு நாய் பயந்துவிட்டது

போலும்; அது திரும்பிப் பத்து பன்னிரண்டு அடி தூரம் ஓடி, மறுபடியும்

நின்று அவனை ஏறிட்டுப் பார்த்தது. நான் குரைத்தால் அம்மாவை ஓட ஓட

விரட்டலாம் என்று சிரித்துக்கொண்ட ராஜம் ஹோட்டலை நோக்கி நடந்தான்.



நாய் அவனைப் பின்பற்றியது.



விநாயகர் கோயிலுக்கு அருகில்தான் ஹோட்டல். அந்த அதிகாலை

நேரத்திலும் அங்கே ஒரே கூட்டம். பழையது சாப்பிட்டுவிட்டு நெசவாளர்கள்

தறிக்குப் போகிற காலம் மலை ஏறி விட்டது. இப்போது காபியோ டீயோ

இருக்கிற வட்டாரம் அல்லவா? ஹோட்டலில் எந்த சாமானும் ‘நிறையக்’

கிடைக்கும். கூஜா நிறையக் காபி கேட்டால் எப்படி தரமாகக் இருக்கும்?

இரண்டு இட்லி பார்சல் கட்டிக் கொண்டு ஒரு டம்ளர் சாம்பார் கேட்டால் இட்லி

எப்படி சுகப்படும்? ஹோட்டல்காரரை எப்படிக் குறை சொல்ல முடியும்?



“ஏது ராஜம், இந்தப் பக்கம் புதுசா? நீ பஞ்சாமி ஹோட்டல் குத்தகை

இல்லை?” என்று அக்கறையாக விசாரித்தான் சப்ளையர் சீமா.



”அட சீமாவா? நீ எப்போ இங்கே வந்தே? பஞ்சாமி ஹோட்டலை விட்டு

எத்தனை நாளாச்சு?”



“ஒரு வாரம் ஆச்சு...”



சீமா, புரோகிதம் ராமசாமி அய்யங்காரின் மகன். அவனுக்குப் புரோகிதம்

பிடிக்கவில்லை; படிப்பும் வரவில்லை. சினிமா ஸ்டாராக வேண்டும் என்ற

கனவுடன் ஹோட்டல் சப்ளையராக வாழ்க்கை தொடங்கினான். இரண்டு மாதம்

சேர்ந்தாற்போல் அவனை ஒரு ஹோட்டலில் காண முடியாது; ஹோட்டலை

மட்டும் அல்ல, ஊரும் மாற்றிக் கொண்டிருப்பான், தஞ்சாவூர், திருச்சி,

மதுரை, மதராஸ் என்று. அவனிடம் ஒரு நல்ல குணம்; ஹோட்டல்

வாடிக்கையாளர்கலை மிகவும் நயமாய் விசாரித்து சப்ளை செய்வான்.

அவர்கள் ஒன்று கேட்டால் இரண்டாய்த் தருவான். பில்லையும் குறைத்துப்

போடுவான். அப்புறம் அவர்களை ஒரு வாரம் பத்து நாளைக்கொரு முறை

தனியாகச் சந்தித்து சினிமாவுக்குச் சில்லறை வாங்கிக் கொள்வான். இதனால்

இரு தரப்புக்கும் ஆதாயம்; இதனால் எந்த ஹோட்டல் முதலாளியும் கெட்டுப்

போனதாய்த் தெரியவில்லை.



“சீமா, அங்கே என்ன அரட்டை அடிக்கிறே?” என்று பெட்டியடியில்

இருந்தவாறு குரல் கொடுத்தார் ஹோட்டல்காரர்.



“சூடா ஒரு காபி...”



“இட்டிலி சூடா இருக்கு. கொத்சு ஏ ஒன். கொண்டு வர்றேன்” என்று சீமா

விரைந்தான்.



இரண்டு இட்லி, ஒரு நெய் ரவா, டிக்ரி காபியோடு எழுந்தான் ராஜம்.

அம்மாவுக்கும் சாரங்கனுக்கும் பார்சல் கட்டிக் கொண்டான். சீமாவின் தயவால்

இரண்டு டம்ளர்கள் வழிய கொத்சும், பில்லில் இருபத்தைந்து பைசாவும்

ஆதாயம்.



“இதுக்குத்தாண்டா ராஜா உன் கையிலே டம்ளர் கொடுத்தேன்!” என்று

சாரங்கன் பாராட்டினான்.



அம்மாவைச் சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று ராஜத்துக்கு ஆசை.



“அம்மா கொத்சு கொண்டு வந்திருக்கேன். ரொம்ப ஜோராயிருக்கு. நம்ம

சீமாதான் டம்ளர் வழியத் தந்தான்....” என்றவாறு அவளிடம் நீட்டினான்.

அவள் வாங்கிக் கொள்ளவில்லை.



“கொண்டு வந்துட்டியா? எதிர் வீட்டுக்காரிக்குக் கொடு, போ!”



ராஜம் அவள் முகத்தைப் பார்த்தான். அந்த முகம் போயிருந்த போக்கு

அவனுக்குப் பிடிக்கவில்லை; இந்தப் பீடையை யாரால் திருப்தி செய்ய

முடியும்? அவனைத் திட்டட்டும்; இரண்டு அடி வேண்டுமானாலும்

அடிக்கட்டும். எதிர் வீட்டுக்காரி பங்கஜத்தை ஏசுகிறாளே, என்ன நியாயம்?

இவளிடம் யார் நியாயம் பேச முடியும்?



இவள் தொலைய வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி. இவளாகத்

தொலைய மாட்டாள். நான் இவளைத் தொலைத்து தலை முழுக வேண்டும்.



“சாம்பார் கேட்டியேன்னு கொண்டு வந்தேன். வேண்டாம்ன்னா உன்

இஷ்டம்... குள்ளி, பல் தேய்ச்சியா? தறிக்குப் போகலாமா?”



குள்ளிக்கு ஒன்பது வயசு இருக்கும்; கடைக்குட்டி. அண்ணன் வருகையை

எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். ராஜம் மாடத்திலிருந்த கடிகாரத்தைப்

பார்த்தான். மணி ஐந்தரை.



அம்மா சளைக்கவில்லை. “நீ வாங்கிட்டு வந்ததை நான் ஏண்டா தொடறேன்?

உன் பெண்டாட்டிகிட்டே கொண்டு போய்க் கொடு...”



“ஊர்ப் பொண்ணுங்களைப் பத்தி இப்படிப் பேசினா.. நல்லா இருக்காது!”



“நல்லா இல்லாவிட்டால் என்ன ஆயிடும்? ரெண்டு இட்டிலி வாங்கிட்டு

வாடான்னா எத்தனை பேச்சு பேசுறே? நாய் என்கிறே; குரங்கு என்கிறே.

பெத்தவளுக்கு வாங்கித் தரணும்னா காசு கிடைக்கலே. வரப் போறவளுக்கு

ஜரிகைச் சேலை, தாம்புக் கயிறு சங்கிலி, பவுன் தாலி எல்லாம் செஞ்சு

பெட்டியிலே பூட்டி வச்சியிருக்கியே. எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே?

அதுக்கெல்லாம் எங்கேருந்து பணம் வருது?”



ராஜத்துக்கு வயிற்றில் மாட்டுக் கொம்பால் குத்துவது போலிருந்தது. “ஏண்டீ,

திருட்டுத்தனமா என் பெட்டியைத் திறந்தா பார்த்தே? என்னைக் கேட்காமே என்

பெட்டியை எப்படித் திறந்தே?” என்று கத்தினான்.



“என் வீட்லே இருக்கிற பெட்டியை நான் திறக்கிறதுக்கு உன்னை எதுக்கடா

கேட்கணும்? நாக்கை அடக்கிப் பேசு. யாரைத் திருடி என்கிறே? இன்னொரு

தடவை சொல்லு. அந்த நாக்கை இழுத்து வெட்டிடுவேன்.”



தன்னுடைய பெரிய ரகசியம் வெளிப்பட்டுவிட்டதால் ராஜத்துக்கு மருள்

வந்தாற் போலிருந்தது. அவன் பங்கஜத்துக்காக - வரப்போகும் மனைவிக்காக

- ஜரிகை புட்டா சேலை - அவன் கைப்பட நெய்தது; முதலாளியிடம் அடக்க

விலைக்கு வாங்கி வைத்திருந்தான். பெரிய தாலியும் சிறிய தாலியும் தட்டி

வைத்தான். ஒரு சங்கிலியும் தயார் செய்தான். யாருக்கும் தெரியாமல்

பெட்டியில் வைத்துப் பூட்டி வைத்திருந்தான். கலியாணம் என்று ஆரம்பித்த

பிறகு எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தேட முடியுமா? சிறுகச் சிறுகச்

சேர்த்து வைத்திருந்தான். அவன் இல்லாத நேரத்தில் அம்மா கள்ளச் சாவியில்

பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறாள். என்ன துணிச்சல்!



“ஏண்டி, என் பெட்டியைத் திறந்தே?” என்று அவன் அம்மாவின் இரண்டு

கைகளையும் பிடித்தான். ஆத்திரத்தோடு ஓர் இருட்டு வயிற்றிலிருந்து

பாய்ந்தாற்போல ஒரு சோர்வு.



“சீ, கையை விடுடா நாயே!” என்று கைகளை உதறி விடுவித்துக்

கொண்டாள் அவள். ”தாலி கட்டின பாடில்லே; அதுக்குள்ளே இந்த ஆட்டம்

போட்றியா? நான் சொல்றதை முடி போட்டு வச்சுக்கோ. அந்த

மேனாமினுக்கியைக் கட்டிக்கணும்னு ஆசைப்படறே, அது நடக்காது. அவ

இந்த வீட்டிலே கால் வச்சா கொலை விழும்; ஆமா, கொலைதான் விழும்!”



ராஜத்தின் வாயை அம்மாவின் சொற்கள் மூடி விட்டன போலும். அவன்

திணறியவன் போல் பேசினான்; “நான் யாரையும் கட்டிக்கலே. குள்ளி, என்ன

வேடிக்கை பார்க்கிறே? தறி மேடை ஏறு.”



அவன் அவளுக்குப் பின்னாலேயே மேடை ஏறினான். நாடாவைக் கண்களில்

ஒத்தி, சாமி கும்பிட்டபின் வேலையைத் தொடங்கினான். தங்கை கரை

கோத்துக் கொடுத்து துணை செய்ய அவன் நெய்யத் தொடங்கினான். நாடா

இப்படியும் அப்படியுமாக ஓடி வெறும் இழைகளாக இருந்த பட்டைச்

சேலையாக்க ஆரம்பித்தது. ராஜம் கால் மாற்றிக் கட்டையை மிதிக்கும்போது

ஓயிங் என்றொரு சத்தம்; அதைத் தொடர்ந்து அவன் பலகை அடிக்கும்

சத்தம். குள்ளி பேசவில்லை. அம்மா ஓய்ந்துவிட்டாளா? அவள் ஓய்வாளா?

ஒன்று அவன் சாக வேண்டும். அல்லதுஅவள் சாக வேண்டும். அதுவரை ஓய

மாட்டாள்.



பெற்றவள் ஒருத்தி இப்படியும் இருப்பாளா? அம்மாவைத் திட்டுவதும்

அடிப்பதும் பாவமாம். அவள் மட்டும் ஊர் உலகத்தில் இல்லாத விதத்தில்

நடக்கலாமா? பன்றிக் குட்டி போல் போட்டதைத் தவிர இவள் வேறு என்ன

செய்து விட்டாள்?



அப்பாவுக்குப் பேராசை. என்றைக்காவது ஒரு நாள் பணக்காரனாகலாம் என்று

கனவு கண்டார். உழைத்துச் சிறுகச் சிறுக முன்னேற முடியும் என்ற

நம்பிக்கை அவருக்கு இல்லை. லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டப் பரீட்சை

செய்கிறார்கள், அல்லவா? அப்பா குழந்தைகளை அதிர்ஷ்டப்பரீட்சையாகப்

பெற்றார். ‘இந்தக் குழந்தையின் ஜாதகம் சுகப்படவில்லை. அடுத்த குழந்தை

நல்ல நேரத்தில் பிறக்கும் பார்!’ என்று அடுத்த குழந்தைக்குத் தயார் ஆவார்.

எதாவது ஒரு குழந்தைக்கு யோக ஜாதகமாய் அமைந்து, அதன் மூலம்தான்

பணக்காரன் ஆகிவிடலாம் என்று அவர் எண்ணம்.



அம்மா அப்படி நினைக்கவில்லை. தான் பெற்றுப் போட்ட புண்ணியத்துக்குப்

பதிலாக ஒவ்வொரு குழந்தையும் பாடுபட்டுத் தனக்குச் சோறு போட

வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல,

பெண் குழந்தைகளுக்கும் அந்த கதிதான்.



ஐந்தாவது வயதில் அவன் கையில் நாடா தந்தார்கள். இன்றுவரை -

அவனுக்கு இப்போது இருபத்தைந்து வயது - நாடா அவனை விடவில்லை.

ஒவ்வொரு தம்பி தங்கையின் கதி இதுதான். மூன்று தங்கைகள் கல்யாணம்

செய்து கொண்டு அம்மாவிடமிருந்து தப்பி விட்டார்கள். கடைசி இரு

தங்கைகளும் - குள்ளிக்கு ஒன்பது வயது, ராஜாமணிக்குப் பதின்மூன்று

வயசு. - நெசவு வேலை செய்கிறார்கள். நாலு தம்பிகளும் தனியாக

இருக்கிறார்கள். அம்மாவிடம் பணம் கொடுத்துவிட்டு இரண்டு வேளை

சாப்பிட்டுப் போகிறார்கள். அவர்களுக்கு அம்மாவால் அதிகத் தொல்லை

இல்லை.



சகதியில் சிக்கிக் கொண்டவன் அவன் தான். அவனும் தனியே போயிருப்பான்.

தோதாகத் தறி மேடை உள்ள இடம் வாடகைக்குக் கிடைக்கவில்லை.

முன்பெல்லாம் தறி மேடைக்கு மட்டும் இரண்டு ரூபாய் வாடகை; இப்போது

ஏழு ரூபாய் கேட்கிறார்கள்; அதற்கும் மேடை கிடைப்பதில்லை. மூன்று

தங்கைகளில் கல்யாணத்துக்குப் பட்ட கடனை அடைக்க வேண்டும்; இரண்டு

தங்கைகள் திருமணத்துக்கும் ஜாக்கிரதை செய்து கொள்ள வேண்டும்.

தம்பிகளுக்கு அந்தப் பொறுப்புகளோ கவலையோ இல்லை. அவன் அப்படி

இருக்க முடியுமா? அம்மாவோடு இருந்தால் சிக்கனமாக இருக்கலாம்

என்றுதான் அவளோடு தங்கினான்.



இப்படிப் பொறுப்புக் கட்டிக் கொண்டு ஆசைப்பட்டதனால்தான் அம்மாவிடம்

வசமாய்ச் சிக்கிக் கொண்டான். அவன் என்ன செய்தாலும், அம்மா

எதிர்க்கட்சி. பங்கஜத்துக்கு என்ன குறைச்சல்? பெற்றவர்கள் இருக்கிறார்கள்!

நாலு அண்ணன் தம்பிகளுக்கு நடுவில் ஒரே பெண்; தறி வேலை தெரியும்;

வீட்டு வேலைகளும் தெரியும். சினிமா ஸ்டார் போல இல்லாவிட்டாலும்

கச்சிதமாக இருப்பாள். அவளைப் பெற்றவர்கள் அவனுக்குப் பெண் தர

முன்வந்தார்கள். அவனுடைய முதலாளியிடம் பேச்சு கொடுத்தார்கள்.

முதலாளி ஜாதகப் பொருத்தம் பார்த்தார். ‘கொடுக்கல் வாங்கல்’ எல்லாம்

அவர்தான் பேசி முடித்தார்.



இவ்வளவு ஆன பிறகு ‘எனக்கு இந்தப் பொண்ணு பிடிக்கல்லே, அவளைக்

கட்டிக்கக் கூடாது’ என்கிறாளே, இது அக்கிரமம் இல்லையா? ஆரம்பத்தில்

அவளிடம் கேட்கவில்லை என்ற குறை; அவளிடம் பேசியிருந்தால் தனியாக

ஐம்பது, நூறு கேட்டு வாங்க்யிருப்பாள். அது கிடைக்கவில்லை என்று

ஆத்திரம். அதற்காகப் பங்கஜத்தைப் பற்றி கேவலமாய்ப் பேசுகிறாளே, இவள்

உருப்படுவாளா? பங்கஜம் எதிர் வீடுதான்; ஆனால் அவன் அவளைத் தலை

தூக்கியாவது பார்த்ததுண்டா? அல்லது அவள் இவன் இருக்கும்

திசைப்பக்கமாவது திரும்பி இருப்பாளா? அந்த உத்தமியைக் கரிக்கிறாளே

இந்தச் சண்டாளி, இவள் வாயில் புழு நெளியுமா, நெளியாதா? அப்பாவைக்

கை தூக்கி அடித்த இந்த ராட்சசிக்குப் பங்கஜம் பற்றி பேச என்ன யோக்கியதை

இருக்கிறது?



எண்ணங்களோடு போட்டியிட்டுக்கொண்டு நாடா பறந்தது. இந்தக்

குழப்பத்திலும் ஓர் இழைகூட அறவில்லை; அண்ணனுடைய மன வேகத்தைப்

புரிந்து கொண்டு குள்ளியும் நாடா கோத்துக் கொடுத்தாள்.



முதலாளி அவன் பக்கம்; அவருக்கு அவன் மேல் ஓர் அபிமானம். ஒரு

நம்பிக்கை. எதற்கெடுத்தாலும் அவனைக் கூப்பிடுவார். அவருடைய உதவி

இருந்ததால்தான் அவன் மூன்று தங்கைகளின் திருமணக் கடனைத் தீர்க்க

முடிந்தது. தன் கல்யாணத்துக்காகவும் சேலை, செயின், தாலி எல்லாம் தயார்

செய்ய முடிந்தது.



அம்மாவுக்கு தெரியக்கூடாது என்றுதான் அவன் அவற்றைப் பெட்டியில் பூட்டி

வைத்தான். அந்தப் பெட்டியைக் கள்ளத்தனமாய்த் திறந்து பார்த்திருக்கிறாளே,

என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்?



அவனுக்குப் படபடவென்று கோபம் மூண்டது. அதே நேரத்தில் அம்மாவின்

குரல், “குள்ளி, ஓவ் குள்ளி, ஏட் ஆவ்!” (குள்ளி, அடி குள்ளி. இங்கே வா!)

என்று கூப்பிட்டது.



சிறுமியான குள்ளிக்கு இருதலைக் கொள்ளியாக இருந்தது. அவளுக்கு

அம்மாவும் வேண்டும். அண்ணாவும் வேண்டும்.



“அண்ணா, அம்மா கூப்பிட்றா” என்று நாடாவை நிறுத்தினாள்.



“வேலை நேரத்தில் ஏன் கூப்படறா?”



“காய்கீ” (என்னவோ)



“இரு புட்டா முடிச்சுட்டுப் போகலாம்”



அதற்குள் அம்மாவின் குரல் மறுபடியும் வீறிட்டது. :ஓவ் ஃபொ வர்தே

காணும் பொஃடர்னி? அவிஸ் கீந் ஹீ?” (அடி கூப்பிடறது காதிலே விழல்லே?

வர்றியா இல்லையா?)



அதற்கு மேல் சோதனை செய்யக் குள்ளி தயாராக இல்லை. நாடாவை

அப்படியே போட்டுவிட்டு, எழுந்து தறி மேடையிலிருந்து கீழே குதித்து

அம்மாவிடம் ஓடினாள்.



சினம் பீறிட்டுக் கொண்டு வந்தது ராஜத்துக்கு. ஆனால் சினத்தில் தலையில்

ஓர் ஓய்ச்சல் இருந்தது. சுருட்டிக் கொண்டு படுத்துத் தூங்கிவிட வேண்டும்,

எழுந்திருக்கவே கூடாது என்று தோன்றியது. சண்டை போடுவதற்கான தெம்பே

இல்லை. உடல் நரம்புகள் மக்கிவிட்டார் போல் இருந்தது. சாம்பார்ச் சண்டை

கல்யாணச் சண்டையாக முடிந்தது. எங்கே முடிந்தது? இன்னும் கிளை

விட்டுக் கொண்டிருக்கிறதே!



அவன் மௌனமாய்த் தலை குனிந்து இழைகளைச் சுத்தம் செய்து

கொண்டிருந்தான்.



சமையலறை பத்தடி தூரத்தில்தான் இருந்தது. அம்மா குள்ளீயை அதட்டுவது

தெளிவாய்க் கேட்டது.



“ஏண்டை, நான் கூப்பிட்டது காதிலே விழல்லே? ஏண்டி இத்தனை நேரம்?”



”சத்தத்திலே கேக்கல்லே.”



“நீ இனிமே இந்தத் தறிக்குப் போக வேண்டாம். புதுத் தெரு சென்னப்பன் நூறு

ரூபா பணம் தர்றேன்னான். பழையது கொட்டிக்கிட்டு அங்கே போ.”



குள்ளியாலே அந்த அநியாயத்தைப் பொறுக்க முடியவில்லை. “அண்ணன்

தறியிலே இன்னும் ஒண்ணே முக்கால் முழம் இருக்கு. முதலாளி அவசரமா

சேலை வேணும்னு...”



”அதெல்லாம் உன்னை யார் கேட்டா? பேசாம பழையது கொட்டிக்கிட்டுத்

தொலை!” என்னும் போது குள்ளியின் தலையில் நறுக்கென்று ஒரு குட்டு

விழுந்தது.



எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜம் தறி மேடையை விட்டுக்

கீழே இறங்கினான்.



“ஏண்டி, என்ன சொல்றே?”



“புதுத் தெரு சென்னப்பன் குள்ளிக்கு நூறு ரூபா முன் பணம் தர்றேன்னான்.

அவளை அங்கே போகச் சொன்னேன்.”



கரை கோத்துக் கொடுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு இப்போது நல்ல கிராக்கி.

ஐம்பதும் நூறும் முன்பணம் தந்து நெசவாளர்கள் அவர்களை வேலைக்கு

அமர்த்திக் கொள்கிறார்கள். அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியும்.



“அவளை அங்கே அனுப்பிவிட்டா நான் என்ன செய்யறது?”



”நீ வேறே ஆளைப் பார்த்துக்கோ. குள்ளிதான் வேணும்னா நூறு ரூபா முன்

பணம் கொடு.”



ராஜத்துக்கு அவளுடைய தந்திரம் புரிந்தது. களவாணித்தனமாய்ப் பெட்டியைத்

திறந்து பார்த்தாளா? பெட்டியில் தாலி, சேலை செயினோடு நூறு ரூபா பணம்

இருப்பதைக் கண்டு விட்டாள். அந்தப் பணத்தைப் பறிக்கத்தான் இந்தக்

குறுக்குவழியில் போகிறாள்.



“மூணு பேருக்கும் நான் உழைச்சுப் போடறேன். குள்ளி வெளியிலே வேலை

செய்வாளா?”



“நீ உழைச்சி எங்களுக்குப் போட வேணாம். முன்பணம் நூறு ரூபா

கொடுத்தாத்தான் குள்ளி உன்னோடு வேலை செய்வாள். ராஜாமணிக்கு

வயசாச்சு. அவ கல்யாணத்துக்கு நான் தயார் செய்யணும். அவளுக்கு ஒரு

தோடு வாங்கப் போறேன்.”



அவன் கல்யாணத்துக்குத் தயார் செய்து கொள்கிறான் அல்லவா? ஏட்டிக்குப்

போட்டியாக ராஜாமணியின் கல்யாணத்துக்குத் தயார் செய்கிறாளாம்!

ராஜாமணிக்குப் பதின்மூன்று வயசு; கல்யாணத்துக்கு இப்போது என்ன

அவசரம்? அப்படியே நல்ல இடத்தில் கேட்டாலும் அவனுக்கல்லவா அந்தப்

பொறுப்பு!



மூன்று தங்கைகளைக் கட்டிக் கொடுத்துவிட்டுக் கடன் காரனாய்க்

கஷ்டப்படுகிறவன் அவன் அல்லவா? இவள் என்ன செய்தாள்? ராஜாமணிக்குத்

தோடு வாங்கவா பணம் கேட்கிறாள்? அவனிடமுள்ள பணத்தைக் கறக்க

வேண்டும்; அவனுக்கு மணமாகாமல் இடைஞ்சல் செய்ய வேண்டும்; அவன்

வேலை செய்ய முடியாதபடி தொல்லை தர வேண்டும். இதுதான் அவள்

எண்ணம்.



பெற்றவளுக்கு இவ்வளவு கெட்ட மனசு இருக்குமா? ராட்சசி, ராட்சசி!



அப்பா இருந்தவரை எலிக்குஞ்சு போல இருந்தவள், அப்பா போனவுடனே

பெருச்சாளி போல் ஆகிவிட்டாள். பிள்ளைகளும் பெண்களும் சம்பாதித்துப்

போடப் போட இவளுக்குச் சதை கூடிக் கொண்டே போகிறது. ஏன் கூடாது?

தறிவேலை செய்து கொடுக்கக் கூட இவளுக்கு உடம்பு வளைவதில்லை; கூலி

வாங்கிக்கொண்டு அவனிடமே பாதி வேலை வாங்கிவிடுகிறாள். நாள்

முழுவதும் கொறிக்கிற கொழுப்புதான் இவளை இப்படியெல்லாம் பேச

வைக்கிறது, செய்ய வைக்கிறது. இந்தத் திமிரை ஒடுக்க வேண்டும். அப்பா

செத்தபோது ஊருக்காக ஒப்பாரி வைத்தாள். இவள் உடம்பு கரைய ஒப்பாரி

வைத்துக் கதறிக் கதறி அழ வேண்டும்.



அவனுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களில் சினமே இல்லை.

“ராஜாமணி கல்யாணத்துக்கு இப்போது என்ன அவசரம்? நான் செய்ய

மாட்டேனா?”



“செய்யறவங்க ரொம்ப பேரைப் பார்த்தாச்சு. கல்யாணத்துக்கு முந்தியே தலை

கீழா நடக்கிறே. கல்யாணம் ஆனப்புறம் யார் புத்தி எப்படி இருக்குமோ, யார்

கண்டா?”



“பெட்டியிலே இருக்கிற பணத்தைப் பார்த்துட்டே. அதைப் பறிமுதல்

செய்யறவரை உன் மனசு ஆறாது, இல்லியா?”



“நான் உன்னை யாசகம் கேட்கல்லே! என் மவ வேலை செஞ்சி கழிக்கப்

போறா!”



“நான் தர மாட்டேன்.”



“நான் கட்டாயப்படுத்தல்லியே! குள்ளி புதுத்தெருவுக்குப் போவா..”



“நீயே எடுத்துக்கோ, இந்தா!” என அவன் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த

பெட்டிச் சாவியை அவளிடம் எறிந்தான். சட்டையை மாட்டிக் கொண்டான்.

கண்ணாடியில் முகம் பார்த்துப் பவுடர் போட்டுக் கொண்டான். கிராப்பை

ஒழுங்கு செய்து கொண்டான். அவனுடைய வாயிலிருந்து வெளிவந்த

சொற்கள் செத்து அழுகி வெளிவருவதாகவும், நாறுவதாகவும் அவனுக்குத்

தோன்றியது.



“பெட்டியிலே நூறு ரூபா இருக்கு. எடுத்துக்கோ, சேலை கட்டிக்கோ, செயின்

போட்டுக்கோ, போ... போ...”



அவளிடம் பேசுவதற்குத் தன்னிடம் சொற்களே இல்லை, எல்லாம் தீர்ந்து

விட்டன என்று அவனுக்குப் புரிந்தது. அவன் பதில் பேசாமல் கீழே

குனிந்தவாறு நடந்தவன் தயங்கி நின்றான்.



“காய்ஃதா?” (என்ன அண்ணா) - என்றவாறு அவள் ஓடி வந்தாள்.



”ராஜாமணிக்கிட்டே நான் அஞ்சுரூபா கடன் வாங்கினேன். அவ சாப்பிட

வார்றப்போ ஒரு ரூபா சேர்த்து அவகிட்ட கொடுத்துடு.”



”ஏழு ரூபா எதுக்கு அண்ணா?”



உனக்கு ஒரு ரூபா, பிரியப்பட்டதை வாங்கித் தின்னு. அம்மாகிட்ட

காட்டாதே.”



‘ஒரு ரூபா எதுக்கு அண்ணா?”



“வச்சுக்கோ, வச்சுக்கோ”



சொல்லிக் கொண்டே அவன் நடந்தான். தலையில் கொதியாய்க் கொதித்தது.

நெஞ்சில் எரியாய் எரிந்தது. பரபரவென்று வீட்டை விட்டு வெளியே வந்தான்.

கிழக்கே நடந்தான்.



மாதப்பா சந்தைத் தாண்டி கீழ்க் கடலங்குடித் தெருவை அடைந்தான்.

உடம்பில் சொல்லி முடியாத ஓய்ச்சல், யாரோ கழுத்தை நெட்டித் தள்ளிக்

கொண்டு போவது போல் இருந்தது. எல்லா இரைச்சல்களும் அடங்கி ஒரே ஓர்

இரைச்சல் கேட்டது. நாய் குரைக்கும் சத்தம். நாய் குரைத்தபடி அவனைக்

கடிக்க வருகிறது. அவன் பயந்து கொண்டு ஓடுகிறான். சீ, கனவில் வந்த

நாய் உண்மையில் துரத்துமா? கடிக்க வருமா? இதென்ன

பைத்தியக்காரத்தனம்?



அவன் நடந்து கொண்டிருந்தான்.



மகாமகக் குளத்தை நெருங்கியதும் அவன் நின்றான். இந்தக் குளத்தில்

விழுந்து செத்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்கிறார்கள். போன மாதம்

கூட அவன் தெருவில் இருந்த கிழவி இதில் விழுந்தாள்; பல பேர்

விழுகிறார்கள். அவனும் விழுந்தால் என்ன? தண்ணீரிலே விழுந்த பிணம்

என்பார்கள். அவன் அதைப் பார்த்திருக்கிறான். அவன் குளத்தில் விழுந்து

செத்து, புசுபுசுவென்று பலூன் போல மிதந்தால், அம்மா அடையாளம் கண்டு

கொள்வாளா? பயப்படுவாளா? அழுவாளா?



ஆனால், அவனுக்கு நீந்தத் தெரியும். குளத்தில் விழுந்தால் லேசில் உயிரை

விட முடியாது. அவனுக்குத்தான் கஷ்டம்.



அவன் தொடர்ந்து நடந்தான். மரணத்துக்கு அஞ்சி ஓடுகிறவன் போல வேர்க்க

விறுவிறுக்க நடந்தான். வெறி நாய் மறுபடியும் துரத்துகிறது. நிஜ நாய்

அல்ல. கனவு நாய் தான். ஆனாலும் அது கடிக்க வருகிறது. அது போதாதா?

பக்கத்து வீட்டுச் சேவல் ஐயோய்யோ என்று கத்துகிறது.



அவன் விழித்தபடி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தான். மணி ஒன்பது

நாற்பது. ஒன்பது ஐம்பதுக்கு ஒரு ரயில் வருகிறது. ரைட்!



அவன் தண்டவாளத்தோடு நடந்து கொண்டே இருந்தான். இரண்டு பர்லாங்கு

நடந்திருப்பானா? எதிரில் ரயில் வருவது தெரிந்தது. ‘அப்பாடா’ என்று ஓர்

உற்சாகம் உண்டாயிற்று. ரயிலுக்கு எதிரில் ஓடினால், டிரைவர் ரயிலை

நிறுத்திவிடுவான் என்று அப்போதும் அவனுக்கு ஜாக்கிரதை இருந்தது.

ஆகையால் அவன் ஒதுங்கியே நின்றான்.



அரசலாற்றை நெருங்கியதும் ரயில் ‘வர்ர்ர்ர்ர்ர்றேன்!’ என்று ஊதியது. அவன்

சிரித்தான். அது பாலத்தைத் தடதடவென்று கடப்பதற்குள், அவனுக்கு

அவசரம். நூறுமுறை விழுந்துவிட்டான். மனதிற்குள்.



எஞ்சின் அவனைத் தாண்டியது. டிரைவர் அவனைப் பார்த்துச் சிரித்துக்

கையை ஆட்டினார். நெருப்புச் சூடு அவனைக் கர்றென்று கிள்ளியது. நாய்

குரைத்தது. சேவல் கூவியது. அம்மா கத்தினாள். ராஜம் ஓட்டப்

பந்தயத்துக்கு நிற்பவன் போல வலது காலை முன்னெடுத்து வைத்தான்.



”தூ ரொஃடி!” (நீ அழுது அழுது சாகணும்!) என்று பலமாய்க் கத்திக்
கொண்டே இரண்டு பெட்டிகளுக்கிடையில் பாய்ந்தான்.

ஆஸ்பத்திரியிலிருந்து சடலத்தை இரவு பத்து மணிக்குத்தான் கொடுத்தார்கள்.
பிரேதத்தை வீட்டுக்குள் கொண்டு போகக் கூடாது என்பதற்காகத்
திண்ணையிலேயே ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார்கள். ரயில் டிரைவர்
சந்தேகப்பட்டுப் பிரேக் போட்டதால் உயிர் போகும் அளவுக்குத் தலையின்
பின்பக்கம் அடிபட்டதைத் தவிர ராஜத்துக்குப் பெரிய நஷ்டம் ஏதும் இல்லை.
ஆஸ்பத்திரிக்காரர்களும் நறுவிசாக வேலை செய்திருந்தார்கள். ஆக,
ராஜத்தின் உடம்பு பார்ப்பதற்குப் பயங்கரமாக இல்லை. கழுத்தில் ரோஜா
மாலையுடன் மாப்பிள்ளைக் கோலத்தில் உட்கார்ந்திருந்தது.

அம்மா அழாமல் இருக்க முடியுமா? கதறிக் கதறி அழுதாள். இந்த
தெருவாசிகள் மட்டும் அல்ல, பல தெருக்களிலிருந்து மக்கள் கூட்டமாக வந்து
பார்த்துக் கலங்கினார்கள்.

எதிர் வீட்டில்தான் பங்கஜம் இருந்தாள். அவளுடைய பெற்றோர் எதிர்
வீட்டுக்குப் போய்விட்டதால் அவள் தன் சகோதரர்களோடு இருந்தாள்.

“ஹய்யா, தூஜீதோ?” (ஏண்டி, நீ போய்ப் பார்க்கவில்லையா?) என்று
அண்ணன் கேட்டான்.

“பார்க்காமே என்ன? பைத்தியக்காரப் பிள்ளை! கலியாணம் ஆனப்பறம் இந்த
வேலை செய்யாமல் இருந்தானே!” என்ற பங்கஜம் போர்வையால்
தலையையும் சேர்த்து மூடிக் கொண்டாள்.

குளிர் மட்டும் அல்ல; கும்பகோணத்தில் கொசுத் தொல்லையும் அதிகம்.

Thanks to Mr.M.G.Ravikumar

-Balaji.TM

Saturday, October 9, 2010

TMS - 100/100





தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் நான்கு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்; ராகத்தோடு உணர்ச்சியையும் குழைத்துப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டிய இசை பிரம்மா!

1. டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' சௌந்தரராஜனையும், 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்காரையும் குறிக்கும். 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர் 'தொகுளுவா' என்பதைக் குறிக்கும். கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு உடம்பில் பலம் உண்டாக்கக்கூடிய சத்து மாவு தயாரித்துத் தருவதில் அந்தக் குடும்பம் பேர் பெற்றது.

2. பிறந்தது மதுரையில். ஒரு அக்கா, ஒரு அண்ணன் உண்டு. டி.எம்.எஸ். மூன்றாவது குழந்தை. இவருக்கு அடுத்துப் பிறந்த ஒரு தம்பி கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் மட்டும் இப்போது மதுரை, ஆனைமலையில் மிருதங்க வித்வானாக இருக்கிறார்.

3. எஸ்.எஸ்.எல்.சி படித்துள்ளார். ஆறாம் வகுப்பு வரை மதுரை செயின்ட் மேரிஸ் ஸ்கூலிலும், மேல்நிலைப் படிப்பை சௌராஷ்டிரா பள்ளியிலும் முடித்தார்.

4. டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார் டி.எம்.எஸ்.



5. 1946-ல் வெளியான 'கிருஷ்ண விஜயம்' படத்தில் நரசிம்ம பாரதிக்குப் பாடிய 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' பாடல்தான் டி.எம்.எஸ் முதன்முதலாக பின்னணி பாடிய பாடல்.

6. டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 'இமயத்துடன்' என்னும் தன்னைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக் கிடந்த அந்த இடங்களில், அதே பழைய ஒலிப்பதிவு அறையைக் கண்டுபிடித்து, அங்கே நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்து, பழைய நினைவுகளில் ஊறித் திளைத்த பாக்கியம் அநேகமாக வேறு எந்தப் பாடகருக்குமே கிடைத்திராத ஒன்று!

7. டி.எம்.எஸ். வறுமையில் வாடிய ஆரம்பக் காலத்தில், கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த எம்.கே.டி. பாகவதருக்கு உதவியாளராகச் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அவரைப் போல் தானே ஒரு நாள் பேரும் புகழும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில், உறுதியோடு அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் டி.எம்.எஸ்.

8. மதுரை வரதராஜ பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார். நல்ல குரலெடுத்து பஜனைப் பாடல்கள் பாடுவதிலும் அவர் வல்லவர். அந்தத் திறமை இயல்பிலேயே டி.எம்.எஸ்ஸிடமும் இருந்தது.

9. டி.எம்.எஸ்ஸும் மதுரை வரதராஜ பெருமாளுக்குச் சேவை செய்துள்ளார். மேல் வருமானத்துக்காக, அந்தக் கோயில் மண்டபத்திலேயே, 'தெற்குப் பெருமாள் மேஸ்திரி தெரு இந்திப் பிரசார சபா' என்னும் பெயரில் ஒரு இந்திப் பள்ளியையும் தொடங்கி, மாணவர்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

10. இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததில்லை டி.எம்.எஸ். மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது.

11. டி.எம்.எஸ்ஸுக்குச் சரளமாக இந்தி பேசவும், படிக்கவும், எழுதவும் தெரியும். அவரது அபிமான இந்திப் பாடகர் முகம்மது ரஃபியிடம் அவர் பாடிய பாடல்களை, அவரைப் போலவே அச்சு அசலாகப் பாடிக் காண்பித்து அசத்தியிருக்கிறார்.

12. டி.எம்.எஸ்ஸுக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை அளித்தவர், அந்நாளில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்த சுந்தர்லால் நட்கர்னி. அவரிடம் எப்படியும் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்றுவிடும் உத்தேசத்தில், அவரது வீட்டில் பணியாளராகவே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

13. தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். (அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)


14. டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்..., உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா, மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப் பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியது டி.எம்.எஸ்தான்!

15. டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடலாகத் திகழ்கிறது. இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ். கர்னாடக இசை மேதை செம்மங்குடியே இதைச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறார்.

16. சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சர்வராகப் பணி செய்து வந்தவர் குழந்தைவேலன். நெற்றியில் திருநீறு, குங்குமம், சுத்தமான உடை, நடவடிக்கைகளில் பணிவு என இருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க, அவர் தங்கியிருந்த அறைக்கே சென்றார் டி.எம்.எஸ். ஒரு நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதி வைத்திருந்த பக்திப் பாடல்களைக் காட்டினார் அவர். அதில் ஒரு பாட்டு டி.எம்.எஸ்ஸுக்கு மிகவும் பிடித்துப்போக, அதற்குத் தானே இசையமைத்துப் பாடினார். பாட்டு ஹிட்! அந்தப் பாடல்தான்... 'உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை...'

17. 'அடிமைப் பெண்' படத்தின்போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். படத்துக்கான பாடலைப் பாடிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட, மகள் திருமணத்தைவிட சினிமா பெரிதல்ல என்று கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிர மணியனுக்குக் கிடைத்து, அவருக்குப் புகழை அள்ளிக் கொடுத்தது. அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா...'.

18. மகள் திருமணம் முடிந்து வந்த பின்பு, டி.எம்.எஸ்ஸை அழைத்து, மீண்டும் தனக்குப் பின்னணி பாடுமாறு கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். டி.எம்.எஸ்ஸும் கோபத்தையும் வருத்தத்தையும் மறந்து, தொடர்ந்து எம்.ஜி.ஆருக்குப் பாடத் தொடங்கினார்.

19. 'அடிமைப் பெண்' படம் வரையில், ஒரு பாடலுக்கு டி.எம்.எஸ். வாங்கிய தொகை வெறும் 500 ரூபாய்தான். (அதன்பின்பு, குறைந்தது ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.) என்னதான் டி.எம்.எஸ். ஒரே டேக்கில் சரியாகப் பாடினாலும், மற்ற பாடகர்கள் உச்சரிப்பில் செய்கிற தவறு, இசைக் குழுவினரில் யாரோ ஒருவர் செய்கிற தவறு போன்ற பல காரணங்களால், அந்தக் காலத்தில் ஒரே பாட்டை மீண்டும் மீண்டும் பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் பாடவேண்டியிருக்கும். அத்தனைக்கும் சேர்த்துத்தான் அந்தத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

20. 'சிந்தனை செய் மனமே' பாடலின் இரண்டாவது பகுதியாகத் தொடரும் 'வடிவேலும் மயிலும் துணை' என்கிற பாடலில் மூச்சு விடாமல் தொடர்ந்து பாடிச் சாதனை செய்திருப்பார் டி.எம்.எஸ்.

21. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டுமல்ல; ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் என ஒவ்வொரு நடிகருக்கேற்பவும் குரல் மாற்றிப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அவரது பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கும் நேயர்களுக்கு இது புரியும்.



22. 'உயர்ந்த மனிதன்' பாடல்களை அதன் தயாரிப்பாளர் ஏவி.எம்-முக்குப் போட்டுக் காண்பித்தார்கள். 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...' இரண்டையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.

23. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். முதன்முதல் பாடிய பாடல், 'மலைக்கள்ளன்' படத்தில் இடம்பெறும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே'.

24. அதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் 'மந்திரிகுமாரி' படத்தில் 'அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். (எம்.ஜி.ஆருக்கு அல்ல!) ஆனால், அந்த சினிமா டைட்டிலில் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை. அதேபோல், 'பல்லாண்டு வாழ்க' படத்திலும் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிற பாரதிதாசன் பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் பட டைட்டிலிலும் டி.எம்.எஸ். பெயர் இடம்பெறவில்லை.

25. 'அன்னம் இட்ட வீட்டிலே...' பாடலை முதன்முதலாக ஒலிபரப்பியது இலங்கை வானொலி. டி.எம்.எஸ்ஸுக்கு முதல் பாராட்டுக் கடிதம் வந்தது இலங்கை, மட்டக்கிளப்பிலிருந்து. டி.எம்.எஸ்ஸுக்குக் கடிதம் எழுதிய முதல் ரசிகர் ஓர் இலங்கைத் தமிழர்.

26. மலையாளத் திரைப்படமான 'ராக சங்கமம்' படத்தில், கிஷோர் இசையில், 'படைச்சோன்தன்னை ரட்சிக்கணும்...' என்ற பாடலைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

27. சமையல் செய்வதில் நிபுணர் டி.எம்.எஸ். முன்னெல்லாம் ஓய்வு கிடைத்தால், இவரது பொழுதுபோக்கே வீட்டில் சமையல் செய்வதில் ஈடுபடுவதுதான். டி.எம்.எஸ். ரசம் வைத்தால், வீடு முழுக்க அந்த வாசனை கமகமக்கும்.

28. பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள், செயின்களை அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர் டி.எம்.எஸ். "இல்லாட்டா ஒருத்தனும் மதிக்கமாட்டான்யா! 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ!'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு" என்பார். வீட்டுக்கு வந்ததும் முதல் காரியமாக அத்தனை நகைகளையும் கழற்றி வைத்துவிடுவார்.

29. சாண்டோ சின்னப்பா தேவருக்கு டி.எம்.எஸ். மீது அளவற்ற அன்பு உண்டு. எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் தயாரித்துள்ளவர் தேவர். 'நல்ல நேரம்' படத்தின்போது, டி.எம்.எஸ். மீது அப்போது எழுந்த ஒரு கோபத்தில், அவரைத் தவிர வேறு யாரையாவது பாட வைக்கும்படி எம்.ஜி.ஆர். சொல்ல, உறுதியாக மறுத்துவிட்டார் தேவர். "அப்படின்னா இந்தப் படத்தை நான் தயாரிக்கவே இல்லே! கேன்ஸல்!" என்று அவர் தீர்மானமாகச் சொன்னதைக் கண்டு, எம்.ஜி.ஆரே வியந்துபோனார். தன் பிடிவாதத்தைக் கைவிட்டார். 'நல்ல நேரம்' படத்தில் டி.எம்.எஸ். பாடிய அத்தனைப் பாடல்களும் சூப்பர்டூப்பர் ஹிட்!

30. ‘ஜெயபேரி’ என்னும் படத்தில் நாகேஸ்வரராவுக்கு ஒரு பாடல். ‘தெய்வம் நீ வேணா... தர்மம் நீ வேணா...’ என்கிற கிளைமாக்ஸ் பாடலான இதை ஹை-பிட்ச்சில் பாடவேண்டும். பாடகர் கண்டசாலா, இசையமைப்பாளர் பென்டியாலா நாகேஸ்வரராவைக் (இவர் நடிகர் நாகேஸ்வரராவ் அல்ல!) கையெடுத்துக் கும்பிட்டு, “இது நம்மால ஆகாதுங்க. டி.எம்.எஸ்ஸைக் கூப்பிட்டுப் பாட வைங்க. அற்புதமா பாடித் தருவார்” என்று சிபாரிசு செய்ய, தமிழைத் தவிர வேறு மொழிகளில் பாட அதிகம் விருப்பம் காட்டாத டி.எம்.எஸ்ஸை வற்புறுத்தி அழைத்துப் போய்ப் பாட வைத்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என யாருக்கும் பாடாத ஒரு புதுக் குரலில், நடிகர் நாகேஸ்வரராவுக்குக் கச்சிதமாகப் பாடித் தந்து அசத்திவிட்டார் டி.எம்.எஸ்.

31. சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை. பாடல்... பாடல்... பாடல்... இதைத் தவிர, வேறு பொழுதுபோக்கோ, அரட்டையோ இல்லாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் டி.எம்.எஸ்.

32. கவிஞர் வாலியைத் திரையுலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ்தான். அது மட்டுமல்ல, அவரை எம்.ஜி.ஆர். உள்பட பல திரையுலகப் பிரபலங்களிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி வைத்து, சான்ஸ் வாங்கித் தந்தவர் டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்றுவரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்ச்சியுடன் கூறுவார் வாலி.



33. ஜெயலலிதாவுடன் இணைந்து, 'சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்...', 'ஓ... மேரி தில்ரூபா...', 'கண்களில் ஆயிரம் ஸ்வீட் ட்ரீம்ஸ்' என மூன்று பாடல்களைப் பாடியுள்ளார் டி.எம்.எஸ்.

34. 'மரியாதைராமன் கதா' என்னும் தெலுங்குப் படத்தில் டி.எம்.எஸ். பாடியுள்ளார். இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிமுகமானார்.

35. சிவாஜிகணேசனுக்கு பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனைத்தான் தனக்குப் பின்னணி பாட வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், சி.எஸ்.ஜெயராமன் தனக்குக் கொடுக்கும் சம்பளம் போதாது என்று பாட மறுத்துவிட்டதால், அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் பாடும் வாய்ப்பு டி.எம்.எஸ்ஸுக்குக் கிடைத்தது. அவரும் பாடிக்கொடுக்க, அத்தனைப் பாடல்களும் பயங்கர ஹிட்! சிவாஜிகணேசன் மகிழ்ந்துபோய், அன்றிலிருந்து தனக்கு டி.எம்.எஸ்ஸே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் படம்தான் 'தூக்குத் தூக்கி'.

36. 'தூக்குத் தூக்கி' படத்துக்கு முன்பே சிவாஜிக்கு 'கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு...' என்ற பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமான 'கூண்டுக்கிளி'யில் இடம்பெற்ற பாடல் அது. அதைக் கேட்டுவிட்டுத்தான் 'மலைக்கள்ளன்' படத்தில் தனக்கு டி.எம்.எஸ்ஸைப் பின்னணி பாட வைக்கும்படி சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர்.

37. பல காதல் டூயட்டுகளைப் பாடிய டி.எம்.எஸ்ஸுக்கும் காதல் தோல்வி உண்டு. தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், வறுமைக் கோட்டில் இருந்த டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக்கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்.

38. பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதிய ஒரே ஒரு சினிமா பாடல்... 'குங்குமப் பொட்டின் மங்கலம்'. அதைப் பாடியவர் டி.எம்.எஸ்.

39. பாடலை வாங்கிப் படித்து, இசையமைப்பாளர் சொன்ன ராகத்தில் பாடிக் கொடுப்பது மட்டுமே தன் கடமை என்று நினைக்காமல், அதை மேலும் சிறப்பாகச் செய்வதற்கான தனது யோசனைகளையும் சொல்வது டி.எம்.எஸ்ஸின் வழக்கம். இப்படித்தான், 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் டி.எம்.எஸ். அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர்.

40. மு.க.முத்து நடித்த பட விழா ஒன்றில், "மந்திரிகுமாரிக்குப் பாடிய டி.எம்.எஸ். இந்த மந்திரி குமாரனுக்கும் பாடியிருக்கிறார்" என்று சிலேடையாகப் புகழ்ந்தார் முதல்வர் மு.கருணாநிதி.

41. 'நாடோ டி மன்னன்' படத்தில் இடம்பெறும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பாடலுக்குப் பரம ரசிகர் இந்திப் பாடகர் முகம்மது ரஃபி. அந்தப் பாடலில், 'விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்' என்கிற வரியில் 'ஓ...' என்று ராகம் இழுப்பார் டி.எம்.எஸ். இந்தப் படம் இந்தியில் தயாரானபோது, இந்தப் பாடல் வரியைக் கேட்ட முகம்மது ரஃபி, "ஹம் மர் ஜாயேங்கே" (இதைப் பாடினா என் உயிர் போயிடும்" என்றாராம். பின்னர், அவருக்கேற்ப டியூனை மாற்றிக் கொடுத்தார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அதேபோல், 'ஓராயிரம் பாடலிலே' பாடலைக் கேட்டு உருகிய ரஃபி, டி.எம்.எஸ்ஸின் தொண்டைப் பகுதியை வருடி, "ஆஹா... இங்கிருந்துதானா அந்தக் குரல் வருது" என்று வியந்திருக்கிறார்.

42. வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்டு மயங்கிய சிவாஜி, இந்தக் காட்சியில் தன் பங்களிப்பும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பையே பல நாள் தள்ளிப் போட்டு, வெவ்வேறு விதமாக நடித்து ரிகர்சல் பார்த்தார்.

43. காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாயிபாபா இருவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாயிபாபா ஒருமுறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார் டி.எம்.எஸ்.



44. கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். இதனால் ஒருமுறை அவர், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்காகக் கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் அந்த வரியை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடித் தந்தார்.

45. பாடல் வரிகளில் உள்ள தமிழ் வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பாடுவதில் தேர்ந்தவர் டி.எம்.எஸ். இதை டாக்டர் மு.வரதராசனாரே குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.

46. பாடலின் பொருளை முழுமையாக உணர்ந்து, உள்வாங்கிக்கொண்டால்தான், அதை உயிர்ப்போடு பாடமுடியும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் டி.எம்.எஸ். அருணகிரிநாதரின் திருப்புகழான 'முத்தைத்தரு பத்தித் திருநகை' பாடலைப் பாட வேண்டி வந்தபோது, அதன் பொருள் அங்கிருந்த ஒருவருக்கும் தெரியவில்லை. எனவே, டி.எம்.எஸ். நேரே கிருபானந்தவாரியாரிடம் சென்று, அந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் தெளிவாக அர்த்தம் தெரிந்துகொண்டு வந்த பின்பே, அதைப் பாடினார்.

47. தான் பாடுகின்ற பாடல், அந்தக் கதைச் சூழ்நிலைக்கேற்பப் பக்காவாகப் பொருந்த வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கிடுபவர் டி.எம்.எஸ். 'உயர்ந்த மனிதன்' படத்தில் சிவாஜி ஓடிக்கொண்டே பாடுகிற காட்சி என்பதால், தானே ஒலிப்பதிவுக் கூடத்தை மூச்சுவாங்க இரண்டு சுற்று ஓடிவந்து டி.எம்.எஸ். மூச்சு வாங்கிப் பாடிய பாடல்தான் 'அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே...'

48. கவிஞர் வாலி முதன்முதல் எழுதியது, 'கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...' என்ற பக்திப் பாடல். ஒரு தபால் கார்டில் இந்தப் பாடலை எழுதி டி.எம்.எஸ்ஸுக்கு அனுப்பினார் வாலி. அதற்கு இசையமைத்து ஹிட் ஆக்கினார் டி.எம்.எஸ். வாலிக்குத் திரையுலக வாசலைத் திறந்து வைத்த பாடல் இது என்றால் மிகையாகாது.

49. நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும்பொருட்டு கோயமுத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார் டி.எம்.எஸ். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்.

50. டி.எம்.எஸ். - சுமித்ரா திருமணப் பத்திரிகையில் ஒரு வேடிக்கையான அடிக் குறிப்பு போடப்பட்டது. 'தங்கள் பங்கான ரேஷன் அரிசியை திருமணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே கிடைக்குமாறு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்பதுதான் அந்தக் குறிப்பு. திருமணத்தில் கலந்துகொள்கிறவர்கள் நிஜமாகவே அரிசி அனுப்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரிசித் தட்டுப்பாடு கடுமையாக நிலவிய காலகட்டம் அது. எனவே, 'இத்தனை பேருக்கு உணவளிக்க எங்கிருந்து உங்களுக்கு அரிசி கிடைத்தது?' என்று அதிகாரிகள் கேட்டால், அவர்களுக்குப் பதில் சொல்வதற்காகப் போடப்பட்ட ஒரு கண்துடைப்பு வாசகம்தான் அது.

51. வசதியிலும் அந்தஸ்திலும் தங்களுக்குக் குறைந்தவர் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குத் தன் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து தர மறுத்துவிட்டார் அண்ணன். சுமித்ராவுக்கோ டி.எம்.எஸ்ஸை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அண்ணனோ தங்கையின் விருப்பத்தையும் மீறி, வேறு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி முடித்துவிட்டார். ஆனால், திருமணத்துக்கு முந்தைய நாள் அந்தக் குறிப்பிட்ட வரன் எதிர்பாராத விதமாக இறந்துவிட, தான் விரும்பிய டி.எம்.எஸ்ஸையே கரம் பிடித்தார் சுமித்ரா.

52. எம்.ஜி.ஆர்., சிவாஜி, மு.கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர் என்ற பெருமைக்குரியவர் டி.எம்.எஸ்.

53. டி.எம்.எஸ். வாய்ப்பு தேடி அலைந்துகொண்டு இருந்த ஆரம்ப நாளில், கோவை, சென்ட்ரல் ஸ்டூடியோ முன்னால் பெட்டிக்கடை வைத்திருந்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அப்போது உண்டான நட்புதான், பின்னாளில் அவர் தன் படங்கள் அனைத்திலும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைக்கக் காரணமாக இருந்தது. 'தாயில்லாமல் நானில்லை' படத்தில் கமல்ஹாசனுக்கும், 'தாய் மீது சத்தியம்' படத்தில் ரஜினிகாந்துக்கும் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்தார் தேவர்.

54. இசைஞானி இளையராஜாவுக்கு டி.எம்.எஸ். குரலில் ஒரு ஈர்ப்பு உண்டு. 'திரையுலகில் உள்ள ஒரே ஒரு ஆம்பிளைக் குரல்' என்று புகழ்வார். அவர் இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி'யில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ்ஸின் குரலே!

55. 'அன்னக்கிளி'க்கு முன்பே 'தீபம்' என்ற படத்துக்காக (பின்னாளில் சிவாஜி நடித்து வெளியான 'தீபம்' இல்லை இது.) கங்கை அமரன் எழுதிய 'சித்தங்கள் தெளிவடைய' என்கிற பாடலை, இளையராஜாவின் இசையமைப்பில் பாடியுள்ளார் டி.எம்.எஸ். அந்தப் படம் வெளியாகவே இல்லை.

56. 'பாகப் பிரிவினை' படத்தின் நூறாவது நாள் விழா, சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் 'அசோகா'வில் நடந்தது. அதில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட்டது. பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை என்பது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட அழைத்தபோது மறுத்துவிட்டார். அவரது கோபத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.


57. சென்னைக்கு வந்ததும் முதலில் ஆழ்வார்பேட்டை பிள்ளையார் தெருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கினார். சொந்த சமையல். பின்பு, திருமணம் ஆனதும் மயிலாப்பூர் புதுத் தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். படங்களில் பாடி, கொஞ்சம் வசதி ஏற்பட்ட பின்பு, இப்போது உள்ள மந்தைவெளி வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார்.

58. “என் வயிற்றைக் குளிர வைத்தது ஏவி.எம். ஸ்டுடியோ; என் மனத்தைக் குளிர வைத்தது மருதகாசி” என்று, ஆரம்பக் காலத்தில் தனக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இருவரையும் இப்போதும் நன்றியுடன் குறிப்பிடுவார் டி.எம்.எஸ்.

59. டி.எம்.எஸ்ஸின் வாரிசுகள் ஏழு பேரில் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இறந்துவிட, பால்ராஜ், செல்வகுமார் ஆகிய இரண்டு மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் மட்டுமே இப்போது இருக்கிறார்கள்.

60. ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா’ என்ற படத்தில், ஆபாவாணன் இசையில் பாடியுள்ளார் பால்ராஜ். ‘சில நேரங்களில்...’ என்னும் படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் அசோகன் மகன் வின்சென்ட் அசோகனுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார். அப்பா டி.எம்.எஸ். நடிகர் அசோகனுக்குப் பாட, மகன் அசோகனின் மகனுக்குப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

61. தன் பிள்ளைகளுக்கு சான்ஸ் கேட்டு இன்று வரை எந்த இசையமைப்பாளரிடமும், தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும், யாரிடமும் போய் நின்றதில்லை டி.எம்.எஸ்.

62. 2006-ல், டி.எம்.எஸ். ரசிகர் மன்றத்தார் டி.எம்.எஸ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஒரு விழா எடுத்தார்கள். ஒரு சிறிய ஹாலில், 200, 300 பேர் மட்டுமே கலந்துகொண்ட அந்த விழாவுக்கு வந்திருந்த மு.க.அழகிரி, ரொம்பவும் வருத்தப்பட்டு, “என்னய்யா... ஒரு இசை மேதைக்கு இப்படியா சின்னதா விழா எடுக்கிறது! ஐயா! உங்க அடுத்த பிறந்த நாளைக்கு நான் எடுக்கறேன் பாருங்க ஒரு விழா!” என்று சொல்லி, சொன்னபடியே 2007-ல் டி.எம்.எஸ்ஸுக்கு மதுரையில் ஒரு பிரமாண்ட விழா எடுத்து, மதுரையையே அதிர வைத்தார்.

63. செம்மொழி மாநாட்டுக்கான பாடல் வெளியீட்டு விழாவில், முன் வரிசையில் அமர்ந்திருந்தார் டி.எம்.எஸ். மேடை ஏறுவதற்காக வந்த கலைஞர், டி.எம்.எஸ்ஸைப் பார்த்துவிட்டு, அவரைக் கையைப் பிடித்து, தானே மேடைக்கு அழைத்துச் சென்று, அவருக்கு ஒரு நாற்காலி போடச் சொல்லி அமர வைத்துக் கௌரவப்படுத்தினார். ‘மந்திரி குமாரி’ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நட்பல்லவா!

64. மதுரைப் பல்கலைக் கழகம் டி.எம்.எஸ்ஸுக்கு 'பேரவைச் செம்மல்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. 'கலைமாமணி' பட்டம் பெற்றுள்ளார். பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ 'டாக்டர்' பட்டம் அளித்துள்ளது. 2000-வது ஆண்டு, ஜனாதிபதி அப்துல்கலாம் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது அளித்துக் கௌரவித்தார்.

65. தனக்கு அதிகம் பாடிய டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞர் ஆக்காமல், சீர்காழி கோவிந்தராஜனை நியமித்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் அவர் டி.எம்.எஸ்ஸை அரசவைக் கவிஞராக ஆக்கினார். இயல், இசை, நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார் டி.எம்.எஸ்.

66. டி.எம்.எஸ். பாடத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை முன்னிட்டு, 1972-ல் அவருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார் ஏவி.எம். அதில், 'எழிலிசை மன்னர்' என்ற பட்டத்தை டி.எம்.எஸ்ஸுக்கு வழங்கிச் சிறப்பித்தார் கலைஞர் மு.கருணாநிதி.

67. "டி.எம்.எஸ் எனக்குப் பின்னணி பாட வந்தது, எனக்குக் கிடைத்த வரப் பிரசாதம்" என்று தன் நெருங்கிய சிநேகிதியான இந்திப் பாடகி லதாமங்கேஷ்கரிடம் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

68. ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகள் சாப்பிட்டிருக்கிறார் டி.எம்.எஸ். ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முழுச் சைவம். முன்பெல்லாம் எப்போதும் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு இருந்தார். இப்போது இல்லை. மற்றபடி, புகைத்தல் போன்ற கெட்டப் பழக்கம் எப்போதும் இல்லை.

69. டி.எம்.எஸ்ஸுக்கு எம்.கே.டி. பாகவதரின் பாடல்கள் என்றால் உயிர். அவர் அடிக்கடி விரும்பிக் கேட்பது, பாகவதரின் 'ஸத்வ குண போதன்...' என்ற பாடல். "அதை முழுமையாக உள்வாங்கிக்கொண்டுதான், அதே பாணியில் 'எங்கே நிம்மதி...' பாடலைப் பாடினேன்" என்று சொல்வார்.

70. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். என்பது ஓர் ஆச்சரியம்! சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடியபின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார் டி.எம்.எஸ்.

71. இவரை "சௌந்தர்" என்று அழைப்பார் எம்.ஜி.ஆர். "வாங்க டி.எம்.எஸ்!" என்பார் சிவாஜி. (டி.எம்.எஸ் இல்லாத நேரங்களில் மற்றவர்களிடம் சிவாஜி, "என்ன, பாகவதர் வந்து பாடிட்டுப் போயிட்டாரா?" என்று டி.எம்.எஸ். பற்றி விசாரிப்பதுண்டு. கேலியாக அல்ல; டி.எம்.எஸ்ஸை பாகவதருக்குச் சமமாக மதித்ததால்!) வெறுமே "சார்" என்று மரியாதையாக அழைப்பார் ரஜினி. கே.வி.மகாதேவனுக்கு டி.எம்.எஸ். "மாப்ளே..!". இயக்குநர் பி.ஆர்.பந்துலு டி.எம்.எஸ்ஸை "வாங்க ஹீரோ!" என்பார்.

72. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவன்.

73. ஜேசுதாஸின் 'தெய்வம் தந்த வீடு...', பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்...' ஆகிய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் டி.எம்.எஸ் .

74. மதுரையில் அரச மரத்துப் பிள்ளையார் கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தக் கோயில் விழாவில், ரொம்ப பிஸியாக இருந்த காலத்திலும், தனக்கு எத்தனை நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு, மதுரை சென்று அந்த விழாவில் கலந்துகொண்டு, கச்சேரி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். டி.எம்.எஸ்.

75. ஆரம்ப காலத்தில் டி.எம்.எஸ்ஸின் வீட்டில் குடியிருந்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். பல நாடுகளுக்கும் அவரை அழைத்துச் சென்று, பல கச்சேரிகளில் தனக்கு வயலின் வாசிக்க வைத்திருக்கிறார் டி.எம்.எஸ்.

76. டி.எம்.எஸ் பாடிய பாடல்களிலேயே, அவரின் துணைவியாருக்கு மிகவும் பிடித்த பாடல்... ‘உள்ளம் உருகுதய்யா முருகா...’




77. டி.எம்.எஸ்ஸின் ஒரு மகன், பதினான்கு வயதில் உடல் நிலை கெட்டு, மரணம் அடைந்ததுதான் டி.எம்.எஸ்ஸின் மனத்தை ரணமாக்கிய நிகழ்ச்சி. மரணத் தறுவாயில் அந்தப் பிள்ளை, தன் தந்தையை முருகன் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டபடியே உயிர் துறந்தான்.

78. டி.எம்.எஸ் கச்சேரிகளில் அவருக்கு கீ-போர்டு வாசித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா; கிட்டார் வாசித்திருக்கிறார் கங்கை அமரன்.

79. ‘நீராரும் கடலுடுத்த...’ என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், ‘ஜனகண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தி!

80. டி.எம்.எஸ். அருமையாக ஹார்மோனியம் வாசிப்பார். அவரோடு ஒருமுறை யாராவது பேசினால், உடனே அவரைப் போலவே குரலை மாற்றி மிமிக்ரி செய்து பேசிக் காட்டுவதில் வல்லவர்.

81. பெரிய பெரிய வி.ஐ.பி-க்கள் விரும்பி அழைத்தும், அவர்கள் வீட்டுத் திருமணத்துக்குச் செல்லாமல் தவிர்த்த சம்பவங்கள் உண்டு; ஆனால், ரசிகர் என்று சொல்லிக்கொண்டு யாரேனும் வந்து அழைப்பு வைத்தால், அவரது இல்லத் திருமணத்துக்குச் சென்று அவசியம் கலந்துகொள்வார் டி.எம்.எஸ்.

82. இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், டி.எம்.எஸ்ஸைப் பலமுறை இந்திப் படங்களில் பாடுவதற்கு அழைத்திருக்கிறார். “வேண்டாம். எனக்குத் தமிழ் மட்டுமே போதும்” என்று தீர்மானமாக மறுத்துவிடுவார் டி.எம்.எஸ். ஒருமுறை, சென்னையில் பிரபல பாடகர்கள் பலரும் கலந்துகொண்ட ஒரு விழாவில், ‘நான் ஆணையிட்டால்...’, ‘ஆடு பார்க்கலாம் ஆடு...’ ஆகிய டி.எம்.எஸ்ஸின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு அசந்துபோன நௌஷாத், டி.எம்.எஸ்ஸிடம், “எத்தனை முறை உங்களைக் கூப்பிட்டிருப்பேன்! வரவேயில்லையே நீங்க! இந்தி சினிமாவுக்குப் பெரிய நஷ்டம்!” என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

83. 'நவராத்திரி' படத்தில் ஒன்பது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார் சிவாஜி கணேசன். அதற்கேற்ப குடிகாரன், விவசாயி, கூத்துக்காரன் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கு ஏற்பவும் தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதே போல், 'கௌரவம்' படத்தில் அப்பா சிவாஜிக்கு கம்பீரமான குரலிலும் (கண்ணா... நீயும் நானுமா), மகன் சிவாஜிக்கு மென்மையான குரலிலும் (மெழுகுவத்தி எரிகின்றது) பாடியிருப்பார்.

84. பாடல் பதிவாகி, பின்பு அதற்கேற்ப நடிகர் வாயசைத்துப் பாடுவதுதான் வழக்கம். ஆனால், 'கௌரவம்' படத்தில் ஒரு புதுமை நடந்தது. எம்.எஸ்.விஸ்வ நாதனே பாடிப் பதிவு செய்திருந்த ஒரு பாட்டுக்கு சிவாஜிகணேசன் வாயசைத்து நடித்துப் படமாக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.வி-க்கு அதில் திருப்தி இல்லை. எனவே, வெளிநாடு சென்றிருந்த டி.எம்.எஸ். வந்த பின்பு, சிவாஜி நடித்த அந்தப் படக் காட்சியை அவருக்குப் போட்டுக் காண்பித்தார். அதைத் திரையில் பார்த்தபடியே டி.எம்.எஸ். உணர்ச்சிகரமாகப் பாடிப் பதிவானதுதான்... 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல்.

85. பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘அகத்தியர்’ உள்ளிட்ட பல படங்களில் பாடகராகவே தோன்றியுள்ளார். பாடகர் ஏ.எல்.ராகவனுடன் இணைந்து இவர் தயாரித்த ‘கல்லும் கனியாகும்’ படத்தில் இவரும் ராகவனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

86. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'டாக்டர்' என்கிற சிங்களப் படத்தில், சிங்கள மொழியிலும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

87. 'நள தமயந்தி' என்னும் தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்திருக்கிறார் டி.எம்.எஸ். 1992-ல், மணிகண்டன் இயக்கத்தில், தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த நாடகத்தில் 'ராஜகுரு' வேடம் ஏற்றிருந்தார் டி.எம்.எஸ்.

88. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும். டி.எம்.எஸ்ஸுக்காக இவர் எடுத்த பிரமாண்ட விழா மதுரை நகரையே ஒரு கலக்குக் கலக்கியது. “எந்தத் தமுக்கம் மைதானத்தில் முதன்முதலாக நான் எம்.கே.டி. பாகவதரைப் பார்த்து வியந்தேனோ... எனக்கும் ஒருநாள் இவ்வளவு பெரிய கூட்டம் கூடவேண்டும் என்று கனவு கண்டேனோ... அதே மைதானத்தில் எனக்குப் பெரிய விழா எடுத்து என் கனவை நனவாக்கிவிட்டார் அழகிரி” என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ்.

89. டி.எம்.எஸ்ஸுக்குப் பிடிக்காத வார்த்தை 'வயசாயிடுச்சு!'. அயர்ச்சி, தளர்ச்சி, சோம்பல் எதுவும் இல்லாமல், இந்த 88 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார் டி.எம்.எஸ். அதற்குக் காரணம், தான் தினமும் தவறாமல் மேற்கொண்டு வரும் யோகாவும், ஆல்ஃபா மெடிட்டேஷனும், உடற்பயிற்சிகளும்தான் என்கிறார்.

90. 'பாமா விஜயம்' படத்தில், 'வரவு எட்டணா, செலவு பத்தணா' பாடலில் பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ் என நால்வருக்கும் இவரே குரலை வித்தியாசப்படுத்திப் பாடியுள்ளார்.

91. இதுவரை எந்தப் பாடகருக்கும் இல்லாத அளவில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு 'இமயத்துடன்' என்னும் தலைப்பில் ஒரு பிரமாண்ட மெகா சீரியலாகத் தயாராகியுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த சீரியலை இயக்கியிருப்பவர் பிலிம் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் மாணவரான விஜயராஜ்.

92. ஒரு பாடல் காட்சியில் சிவாஜி எப்படி நடிப்பார் என்று யூகித்து, அதற்கேற்பப் பாடுவதில் கெட்டிக்காரர் டி.எம்.எஸ். 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.


93. இத்தனை வயதிலும் பாடல் பதிவென்றால், உற்சாகமாகத் தயாராகிவிடுவார் டி.எம்.எஸ். ஆரம்ப நாளில் கடைப்பிடித்த அதே அர்ப்பணிப்பு உணர்வோடு, பாடல் வரிகளைத் தினம் தினம் வெவ்வேறு விதமாகப் பாடிப் பாடிப் பழகிக் கொள்வார். சில ஆண்டுகளுக்கு முன், 'வாலிபன் சுற்றும் உலகம்' என்னும் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் பி.சுசீலாவோடு இணைந்து டி.எம்.எஸ். ஒரு பாடல் பாடினார். அந்தப் படம் வெளியாகவில்லை.

94. இந்த ஆண்டு, மார்ச் மாதம் 24-ம் தேதி, டி.எம்.எஸ்ஸுக்கு 88-வது பிறந்த நாள். அன்றைய தினம், அவர் மலேசியாவில் தயாராகி வரும் ஒரு தமிழ்ப்படத்தில், மலேசிய இசையமைப்பாளர் லாரன்ஸின் இசையில், கதாநாயகனின் அப்பாவுக்காகப் பின்னணி பாடிவிட்டு வந்திருக்கிறார்.

95. 'எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களுக்குப் பாடிய டி.எம்.எஸ் தனக்குப் பாட மாட்டாரா' என்று ஏங்கிய ரஜினிகாந்த், 'பைரவி' படத்தில் 'நண்டூருது, நரியூருது' பாடலைத் தனக்காகத்தான் பாடுகிறார் என்று அறிந்தபோது, மிகவும் மகிழ்ந்து அந்தப் பாடல் பதிவு முழுக்க அங்கேயே இருந்து ரசித்திருக்கிறார்.

96. கோவையில் நடைபெறவிருக்கும் செம்மொழி மாநாட்டில் வெளியிடுவதற்காக, ஒரு இசை ஆல்பத்தில் டி.எம்.எஸ்ஸைப் பாட வைத்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

97. முன்பெல்லாம் சஃபாரி சூட் அணிவதில் விருப்பம் உள்ளவராக இருந்தார் டி.எம்.எஸ். இப்போது சந்தன நிற பைஜாமா, ஜிப்பாதான்! ஒருமுறை எம்.ஜி.ஆர். இவருக்கு அளித்த தங்கச் சங்கிலியை பல வருடங்கள் ஆசையோடு அணிந்திருந்தார். இப்போது இல்லை.

98. அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கெல்லாம் பலமுறை சென்று கச்சேரிகள் செய்துள்ளார்.

99. மந்தைவெளி வீட்டின் வாசலில் ஒரு பள்ளிச் சிறுவன் தயங்கி நிற்பதைக் கண்டு, அவனை அழைத்து விசாரித்தார் டி.எம்.எஸ். அவன் கையில் ஒரு துண்டுச் சீட்டு. “ஐயா! நான் உங்கள் ரசிகன். உங்களின் இந்தப் பாடல்களை எனக்கு கேஸட்டில் பதிந்து தர முடியுமா?” என்று கேட்டான் அவன். மாடியில் இருந்த அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அவன் கேட்ட பாடல்களைப் பதிந்து தந்தார் டி.எம்.எஸ். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மு.க.அழகிரி

100. சென்னை- திருவள்ளூரில் ஒரு கச்சேரி. தனக்கு கீ-போர்ட் வாசிக்க வந்திருந்த ஒரு குட்டிப் பையனைப் பார்த்ததும், “என்ன இது, பச்சைக் குழந்தையைப் போய்க் கூட்டிட்டு வந்திருக்கீங்க..? இவன் சரியா வாசிப்பானா?” என்று கேட்டார் டி.எம்.எஸ். “அருமையா வாசிப்பான் சார்! நம்ம சேகருடைய பையன்தான் இவன்!” என்று அறிமுகப்படுத்தினார் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. ‘உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...’ என டி.எம்.எஸ். பாட, அந்தப் பையன் கீ-போர்டு வாசிக்க, அதில் அசந்துபோன டி.எம்.எஸ். அந்தச் சிறுவனை அருகே அழைத்து, அவன் தலையில் செல்லமாகக் குட்டி, “மோதிரக் கையால் குட்டியிருக்கேன். நீ பெரிய ஆளா வரப்போறே பாரு!” என்று அன்போடு வாழ்த்தினார். அந்தப் பையன்... ஏ.ஆர்.ரஹ்மான்.

Friday, March 26, 2010

229th Jayanthi Celebrations of Srimad Venkataramana Bhagavathar at Ayyampettai

229th Janyanthi of Srimad Walajapet Venkataramana Bhagavathar was celebrated by holding a music aradhana festival at Ayyampettai, Thanjavur District on 7th March, 8th March and 9th March 2010.








Thanks to Mr.O.S.Subramanian.

Friday, February 26, 2010

Reformer of Sourashtra people

சௌராஷ்டிர ஸமூஹ புனரமைப்பாளி K .R . கிருஷ்ணமூர்த்தி








இவர் ராஜுலையர் – பார்வதி தம்பதியர்க்கு 26 -4 -1912 ஆம் ஆண்டு பிறந்தார். தனது சௌராஷ்டிர ஸமூகத்திந் பரம்பரை தொழிலான நெசவு தொழிலை செய்து வந்த மக்கள் படிப்பறிவற்று பாமரர்களாக, வறுமையில், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதை கண்டு இளமை காலம் முதல் நெசவு தொழிலை துறந்து SSLC பயின்று ஆசிரியர் ஆனார். பின்னாளில் Elementary School Supervisor of Salem (தற்கால AEO ) என்று பதவி உயர்வு பெற்றார்.




அன்றைய காலத்தில் நம் மக்கள் இருந்த இருண்ட பின்தங்கிய தற்குறி நிலை போக்கி, அனைவரும் படிப்பறிவு பெற்று நன்னிலை அடைய வேண்டும் என்று இலவச கல்வி கற்ப்பிக்கத் துவங்கினார். ஆனாலும் நெசவு நெய்தால் தானே வயிற்றுக்கு வழி என்று பலரும் பள்ளிக்கு தமது பிள்ளைகளை அனுப்பவில்லை. வறுமை கொடிது அல்லவா? எனவே விடியற்காலை தனது நண்பர் ம:ளுவாது ஸ்ரீனிவாசன் அவர்களுடன் சேர்ந்து வீதி தோறும் மணி ஒலித்துக் கொண்டே செல்வார். மாணவர்கள் எழுந்து அவர் பின்னே சத்தார் பள்டம் எனப்படும் சேர்மன் சடகோபர் தெருவில் இருக்கும், அவரின் முயற்சியில் ஆரம்பித்த பள்ளிக்கு வருவர். பின்னர் பாடம் கற்று தருவார்.
நாம் லவ்லேத் புன்னு அப்போய்
தவ்ராக் ஜேத் பன்னார் அப்போய்
மகோ வினேத் காஸ் அப்போய்
பள்டங்கு ஜேத் லாத் அப்போய்

என்று சில சிறுவர்களை பள்ளியின் அருகில் விட்டு கோரசாக பாடி பாடம் நடத்துவதை இடைஞ்சல் செய்வர். நமத மக்களின் மனப்பாங்கு இப்படி இருக்கிறதே என்று அவர் அதனை பொருட் படுத்தாமல் தனது இலவச கல்விப் பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
தன்னிடம் பாடம் கற்றவர்கள் மேலும் வருமானமடைய ஆசிரியர் பயிற்சி கற்று தந்து பலரை ஆசிரியர்கள் ஆக்கினார். சலிக்காமல் கல்வி பணி செய்தது மட்டும் அல்லாமல், தன்னிடம் வரும் சௌராஷ்டிர ஸமூக மக்களில் படிப்பறிவற்றவர்களின் மனு எழுதுதல், பென்சன் வாங்கி தருதல் போன்ற சிறு, பெரிய உதவிகளை செய்து கொண்டே இருப்பார்.
இவர் சௌராஷ்டிரா கல்யாண மகாலின் செயலாளர் (பென்னாடம் வெங்கட்ராம் தெரு) ஆக இருந்த போது, இவரின் நிர்வாக திறமையை பார்த்து சௌராஷ்டிர விப்ரகுல நந்தவனம், வீராணம் ஆஞ்ஜநேயர் கோவில் ஆகிய நிர்வாகிகள் தாமே முன் வந்து இவர் நிர்வகித்த சௌ. கல்யாண மஹால் நிர்வாகம் வசம் தங்களது நிர்வாகத்தை ஒப்படைத்தனர்.
வீராணம் ஆஞ்ச நேயர் கோவிலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பன்னிரண்டு அடி உயர சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.





தனது வாழ் நாளில் இவர் செய்த சாதனைகள் பல.

1954 -55 ஆம் வருடம் தமிழ் நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடியது. அப்போது பல நெசவாளிகள் குறைந்த பட்ச கூலி பெற முடியாமல் பட்டினியால் தங்களது குடும்பம் சிறிது சிறிதாக இறப்பது கண்டு, கூலி நெசவாளர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாம்பே செல்லத் துவங்கினர். இதனை தடுக்கவும் முதலாளிகளின் மனப்பான்மையை மாற்றவும் சேலம் டவுன் கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் என்ற ஸ்தாபனத்தை, அன்றைய தமிழக நிதிஅமைச்சராக இருந்த C .சுப்ரமணியம் அவர்களை அழைத்து, ஸ்தாபனம் ஆரம்பித்து பாம்பே செல்வதை தடுத்தார். இதன் பின் கூலி நெசவாளர்கள் வாழ்வில் சிறிது சிறிதாக பிச்சை எடுக்கும் நிலையில் இருந்து முன்னேற ஆரம்பித்தனர்.

பின் இச் சங்கம் பல காரணங்களால் செயல் படவில்லை.

எனவே கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில் வெவ்வேறு கால கட்டங்களில் ஆரம்பித்தார். இச் சங்கங்கள் இன்றும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு உள்ளன. நெசவளார்கள் வாழ்வில் வறுமை நிலையை போக்கிய இச் சங்கங்கள் இவரது மிகப் பெரும் சாதனை. ஏன் எனில் பலரும் யோசித்து கூட பார்க்காட்ட சமயத்தில் பிரச்சனைகளை யோசித்து அதன் தீர்வையும் கண்டவர்.

1956 ஆம் ஆம் ஆண்டு சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்தார்.

1974 ஆம் ஆண்டு சேலம் ராஜகணபதி பட்டு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்தார்.

1976 ஆம் ஆண்டு சூப்பர் பட்டு சொசைட்டி ஆரம்பித்தார்.

இவைகள் நெசவாளர்கள் வாழ்வில், கூலி உயர்வு பெற காரணமாக இருந்தது.

பின்

ஆசிரியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் அமைத்து பலரும் சொந்த வீடு வாங்க வழி வகை செய்தார்.

நெசவாளர்கள் வீடு கட்டும் சங்கம் 1979 -1980 இல் உருவாக்கி அசோக் நகர் என்ற நெசவாளர் குடிஇருப்பை குறித்த செலவில் பலரும் வீடு பெற வகை செய்தார்.

ஹிந்து சமய மன்ற செயலாளராக இருந்து சௌ.கல்யாண மகாலில் வாரியார், கீரன் போன்ற சிறந்த ஆன்மீக பேச்சாளர்களை கொண்டு மார்கழி உபன்யாசம் மாதக்கணக்கில் செய்வித்தார்.


இத்தனை சேவைகள் செய்திருந்தாலும் சிறிதும் கர்வமின்றி வாழ்ந்தவர் . “நான் செய்தேன்” என்று கூட பெருமையாக எடையும் சொல்லிக் கொள்ள மாட்டார். அடக்கமே உருவாக வாழ்ந்தவர். அவரது வழியில் அவரது மகனும் ஸமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் சோமநாதபுர பாணியில் , சேலம் நாமமலையில் சோமநாதேஸ்வரர் கோவிலை உருவாக்குவதில் பெரிய பங்கு வகித்து உள்ளார்.

குச்சீன்-அய்ய என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் 26 -4 -1997 ஆண்டு வைகுண்ட ப்ராப்தி அடைந்தார்.

தெ3ஸ்வான் என்ற வீட்டுப் பெயர் உடைய இவர்கள், தங்களது முன்னோர்களில் ஒருவர் ‘குறிச்சி’ என்ற ஊரில் சில காலம் வாழ்ந்து பின் சேலம் திரும்பியதால் குறிச்சி என்ற வீட்டுப் பெயர் (surname ) உடையவர்களாக அழைக்கப்படுகின்றனர்.


Thanks to
http://sourashtri.wordpress.com/
-Balaji.TM

Friday, February 19, 2010

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் டி.எம்.எஸ்.


உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் (87) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரது உடல் நிலை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த டி.எம்.எஸ்., உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகி்ச்சை அளித்தனர். ஞாபக சக்தி குறைந்ததால் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. உடலில் உப்பின் அளவு குறைந்து விட்டதாலும், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாலும் ஞாபக சக்தி குறைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் டி.எம்.எஸ். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

-Balaji.TM

Data:http://cinema.dinamalar.com